மதுரை: மதுரை மாநகராட்சியில் தலைமைப் பொறியாளர் பணியிடம் காலியாக இருப்பதால், பல பணிகளுக்கு சென்னையில் ஒப்புதல் பெற்று நிறைவேற்ற வேண்டியிருப்பதால் திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது.
மாநகராட்சிகளில் குடிநீர், சாலை, மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை, புதிய கட்டிடங்கள், தெருவிளக்குகள் அமைப்பது மற்றும் பராமரிப்பது உள்ளிட்ட பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்வது, டெண்டர் விடுவது, திட்டத்தை செயல்படுத்துவது, கண்காணிப்பது போன்ற பல்வேறு பணிகளை தலைமைப் பொறியாளர் தலைமையிலான பொறியியல் துறை அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற முக்கிய மாநகராட்சிகளில் தலைமைப் பொறியாளர் பதவிக்கு வருவதற்கு பொறியியல் துறை உயர் அதிகாரிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், மதுரை மாநகராட்சியில் தலைமைப் பொறியாளராக இருந்த ரூபன் சுரேஷ், கடந்த மாதம் ஓய்வு பெற்றார். தற்போது தலைமைப் பொறியாளர் பணியை கூடுதல் பொறுப்பாக மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் முகமது சபியுல்லா பார்த்து வருகிறார்.
பொதுவாக இதுபோன்ற முக்கிய பதவியிடங்களில் உள்ள ஒருவர் பணியிட மாற்றம் அல்லது ஓய்வு பெற்றுச் சென்றால், உடனடியாக நிரப்பப்பட்டு விடும். ஆனால், ரூபன் சுரேஷ் ஓய்வு பெற்று 2 வாரங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் தலைமைப் பொறியாளர் நியமனம் தாமதமாகி வருகிறது. அதேநேரம், இந்த பொறுப்புக்கு வர தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி தலைமைப் பொறியாளர்கள், பதவி உயர்வு பெற்று இப்பதவிக்கு வரக்கூடிய கண்காணிப்பு பொறியாளர்கள் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு முதல் உள்ளூர் அமைச்சர்கள் வரை பலரையும் அணுகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
» தாக்கலானது தமிழக அரசின் பட்ஜெட்: எதிர்பார்ப்புகள் பூர்த்தியானதா? அறிவிப்புகள் என்னென்ன?
மதுரை மாநகராட்சியில் தற்போது நடைபெற்று வரும் புதிய கட்டுமானங்கள், பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், சாலைப் பணிகளை தலைமைப் பொறியாளர் ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும். ஆனால், தலைமைப் பொறியாளர் இல்லாததால் இப்பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. புதிய திட்டங்களுக்கு அனுமதி பெற பொறியியல் பிரிவு அதிகாரிகள் சென்னைக்குச் சென்று உயர் அதிகாரிகளை சந்திக்க வேண்டியுள்ளது. அதனால், தலைமைப் பொறியாளர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ”தலைமைப் பொறியாளர் இருந்தால் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு, சென்னை நகராட்சி நிர்வாக ஆணையத்துக்குச் சென்று அனுமதி பெற வேண்டிய தேவையில்லை. ரூ.6 கோடி வரையிலான திட்ட மதிப்பீடுகளுக்கு தலைமைப் பொறியாளரே அனுமதி கொடுத்து பணிகளை மேற்கொள்ளலாம். 100 வார்டுகளிலும் நடக்கும் குடிநீர், சாலை, பாதாள சாக்கடை திட்டப் பணிகளை துரிதப் படுத்த வேண்டியுள்ளது.
பெரியார் பேருந்து நிலைய வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் திறக்கப்பட வில்லை. அதனால், மாநகராட்சிக்கு மாதந்தோறும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. பணிகள் தாமதமடைவதை தடுக்க தலைமைப் பொறியாளரை நியமிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.