முதல்வர் தலைமையில் இன்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

By KU BUREAU

இன்று தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், இன்று மாலை திமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையி்ல் நடைபெறுகிறது.

தமிழக அரசின் வரும் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். தொடர்ந்து, அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாட்கள் சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தை நடத்துவது என்பதை முடிவு செய்யும். தொடர்ந்து, நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதன்பின் வரும் மார்ச் 17 முதல் 21ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பட்ஜெட் மீதான விவாத்தில் பேச வேண்டிய விஷயங்கள், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பது, விவாதத்தின்போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து, இன்று மாலை திமுக எம்எல்ஏ.க்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்களை வழங்குகிறார்.

இதற்கான கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து அரசு தலைமை கொறடா கே.ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்பி்ல்,‘‘ முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் மார்ச் 14-ம் தேதி (இன்று) மாலை 6.30 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

பாலியல் சம்பவங்கள், மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் பிரச்சினையை கிளப்பலாம் என்பதால், அதற்கேற்ப எம்எல்ஏ.க்களை தயார்படுத்தும் நடவடிக்கையாக திமுக தலைமை இக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS