சென்னை: சம்மன் ஒட்டச் சென்றபோது போலீஸாரிடம் தகராறில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டுப்பணியாளர் மற்றும் பாதுகாவலருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் பதியப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் வீட்டில் வளசரவாக்கம் போலீஸார் சம்மன் ஒட்டினர். இந்த சம்மனை பணியாளர் சுபாகர் கிழித்தார். இதில் ஏற்பட்ட பிரச்சினையில் போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டதாக சுபாகர் மற்றும் வீட்டின் பாதுகாவலரான அமல்ராஜ் ஆகியோரைக் கைது செய்த நீலாங்கரை போலீஸார், அமல்ராஜ் வைத்திருந்த கைத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் இருவரும் ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சுந்தர் மோகன் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், ‘‘இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் பதியப்பட்டுள்ளது. துப்பாக்கி வைத்திருப்பதற்கு உரிமம் இருப்பதால் தங்களை ஆயுத தடுப்புச்சட்ட பிரிவில் கைது செய்திருப்பது சட்டவிரோதமானது. ஜாமீனில் வெளியே வரக்கூடிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளபோதும் கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை’’ என வாதிடப்பட்டது.
பதிலுக்கு காவல்துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் அருள்செல்வம், ‘‘சம்மனைக் கிழித்தது தொடர்பாக கேட்கச்சென்ற காவல் ஆய்வாளரை சீமான் வீட்டுப் பாதுகாவலர் உள்ளே செல்ல விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டார். அவரது வீட்டுப்பணியாளர் சம்மனைக் கிழித்துள்ளார். ஒருவேளை பாதுகாவலர் வைத்திருந்த துப்பாக்கி வெடித்து இருந்தால் அசம்பாவிதம் நிகழ்ந்து இருக்கும். துப்பாக்கி உரிமம் சொந்த பாதுகாப்புக்குத்தான் வழங்கப்படுகிறதே தவிர, அடுத்தவர்களை மிரட்டுவதற்காக அல்ல’’ என்றார்.
அதையடுத்து நீதிபதி, ‘‘துப்பாக்கியை தவறாகப் பயன்படுத்தியிருந்தால் உரிமத்தை ரத்து செய்வது தொடர்பாக அரசு முடிவு எடுக்கலாம். இருவர் மீதான குற்றச்சாட்டுக்குள் செல்ல விரும்பவில்லை. அதை அவர்கள் சட்டரீதியாக எதிர்கொள்ளட்டும். எனவே இருவரும் தினமும் காலை 10.30 மணிக்கு சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்’’, என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.