பொன் மாணிக்கவேல் மீதான சிபிஐ விசாரணைக்கு தடை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

By KU BUREAU

ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணைக்கும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கும் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.

தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் பொன் மாணிக்கவேல். சிலை கடத்தல் வழக்கின் முக்கியக் குற்றவாளி தீனதயாளனைத் தப்பவைக்க உதவியது தொடர்பாக பொன் மாணிக்கவேல் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிடக்கோரி, அதே பிரிவில் டிஎஸ்பியாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற காதர்பாட்ஷா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பொன் மாணிக்கவேலுக்கு எதிரான புகார் குறித்து முதல்கட்ட விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யுமாரு சிபிஐக்கு உத்தரவிட்டார். அதன்படி சிபிஐ விசாரணை நடத்தி, பொன் மாணிக்கவேல் மீது வழக்கு பதிந்து, மதுரை மாவட்ட கூடுதல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் முதல்கட்ட விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தது.

இந்நிலையில், தன் மீதான புகாரின் முதல்கட்ட விசாரணை அறிக்கை நகல் கேட்டு பொன் மாணிக்கவேல் விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடியானது. இதையடுத்து, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதை நீதிபதி பி. புகழேந்தி விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

பொன் மாணிக்கவேல் மீதான முதல் தகவல் அறிக்கையில் போதிய விவரங்கள் இல்லாமல், மேலோட்டமாகப் பதிவு செய்ப்பட்டுள்ளன. குற்றம்சாட்டப்பட்ட நபரின் பேச்சைக் கேட்டு இவ்வாறு வழக்குப் பதிந்தால், வருங்காலத்தில் குற்றம்சாட்டப்படும் நபர்கள், எந்த விசாரணை அதிகாரி மீது வேண்டுமானாலும் புகார் கொடுத்து, இதுபோல வழக்குப் பதிவு செய்யலாமா? இது ஒட்டுமொத்த அமைப்பை சீர்குலைக்காதா? இவ்வாறு இருந்தால் அதிகாரிகள் எவ்வாறு நேர்மையாக, சுயாதீனமாகப் பணியாற்ற முன்வருவார்கள்?

தற்போது பொன் மாணிக்கவேலின் முன் ஜாமீன் மனுவை ரத்து செய்யக் கோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பொன் மாணிக்கவேலை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதா? முறையாகப் பணியாற்றும் அலுவலர்களைப் பாதுகாக்க வேண்டும். முறையான விவரங்கள் இல்லாமல் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, விசாரணைக்கு உகந்தது அல்ல. எனவே, பொன் மாணிக்கவேல் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அவர் மீதான வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக் கூடாது.

பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் உயர் அதிகாரியாகப் பொறுப்பேற்பதற்கு முன்பு சிலை கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? பொறுப்பேற்ற பின்பு எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பான விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை மார்ச் 17-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE