பெரியகுளம்: கொடைக்கானல் அருகே வெள்ளகவி மலைகிராமத்தில் இருந்து உடல் நலம் பாதித்த பெண்ணை டோலிகட்டி மலைப்பகுதி வழியே உறவினர்கள் பெரியகுளத்துக்கு தூக்கி வந்தனர். இருப்பினும் வரும் வழியிலே அவர் உயிரிழந்தார்.
கொடைக்கானல் அருகே உள்ள மலைகிராமம் வெள்ளகவி. வனப்பகுதியில் அமைந்த இப்பகுதிக்கு முறையான சாலை வசதி இல்லை. மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு தேனி மாவட்ட மலைப்பகுதி வழியே பெரியகுளத்துக்கே வர வேண்டும். இந்நிலையில் வியாழக்கிழமை (மாரச்.12) இக்கிராமத்தைச் சேர்ந்த மணிமேகலை (34) என்பவருக்கு குறை ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து டோலி கட்டி இவரை வனப்பகுதி வழியே தூக்கி வந்தனர். 12 கிமீ.கடந்து கும்பக்கரை வந்ததும் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் வழியிலே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மீண்டும் உடலை மலைகிராமத்துக்கு கொண்டு செல்ல முடியாததால் நகராட்சி எரியூட்டு மையத்திலே உடல் தகனம் செய்யப்பட்டது. இதுகுறித்து இக்கிராம மக்கள் கூறுகையில், “ஆங்கிலேயர் கொடைக்கானல் நகருக்கு முன்பாகவே இந்த மலைகிராமத்தைதான் உருவாக்கினர்.
» மதுரை விரகனூரில் நின்ற லாரியில் தனியார் பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு, 12 பேர் காயம்
ஆனால் நூறு ஆண்டுகள் கடந்தும் இதற்கு சாலை வசதி கிடையாது. அவசரம் மற்றும் அத்தியாவசியத் தேவைக்கு மலைப்பகுதி வழியே பெருமாள்மலை, கொடைக்கானலுக்கு செல்ல வேண்டும். ஆனால் ஏற்றமான மலைப்பாதை என்பதால் 12 கிமீ தூரம் மலையிறங்கி தேனி மாவட்டம் கும்பக்கரையை அடைந்து பின்பு ஜீப்பில் பெரியகுளம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தொடர்ந்து இதுபோன்ற இறப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆகவே சாலைவசதி ஏற்படுத்தித் தர வேண்டும்” என்றனர்.