நுரையீரல் ரத்தக் குழாயில் அடைப்பு: பெண்ணுக்கு ஐவிசி ஃபில்ட்டர் சிகிச்சை அளித்து சேலம் அரசு மருத்துவர்கள் சாதனை

By எஸ்.விஜயகுமார்

சேலம்: நுரையீரல் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்த பெண்ணுக்கு, சேலம் அரசு மருத்துவமனையில், ஐவிசி ஃபில்ட்டர் பொருத்தி, இருதயவியல் துறை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர் என்று மருத்துவமனை டீன் தேவி மீனாள் தெரிவித்துள்ளார்.

சிகிச்சை விவரங்கள் குறித்து, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் தேவி மீனாள் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ''பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமதி (40) என்பவர், நுரையீரல் ரத்தக் குழாயில் அடைப்பு, வலது காலில் ஹெமாஞ்சியோமா எனப்படும் அதீத ரத்தக் குழாய் வளர்ச்சி மற்றும் இரண்டு கால்களிலும் ரத்தம் உறைதலினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையின், இருதய மருத்துவ சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு, இருதயவியல் துறை மருத்துவர்கள், ரத்தம் உறைதலை தடுக்கும் வகையில், ஸ்ட்ரெப்டோகினேஸ் எனப்படும் மருந்தினை செலுத்தி, நுரையீரல் ரத்தக் குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பை சரி செய்தனர்.

எனினும், அவரது காலில் இருந்த ரத்தக் குழாய் அடைப்புக்கு, உரிய சிகிச்சை அளித்தும் சரியாகவில்லை. இதனால், அவருக்கு மீண்டும் நுரையீரல் ரத்தக் குழாயில் மீண்டும் அடைப்பு ஏற்படாமல் தடுக்க, ஐவிசி ஃபில்ட்டர் பொருத்த திட்டமிடப்பட்டது. ஏனென்றால், அவருக்கு மீண்டும் நுரையீரல் ரத்தக் குழாய் அடைப்பு ஏற்படும்போது நெஞ்சுவலி, மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் குறைதல் ஆகியவை ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

நுரையீரல் ரத்தக் குழாய் அடைப்பினால், ஆயிரத்தில் ஒருவரும். கால்களில் ஏற்படும் ரத்த உறைதல் ஆயிரத்தில் இருவரையும் பாதிக்கலாம். நுரையீரல் ரத்தக் குழாய் அடைப்பினால், ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு, கடந்த பிப்ரவரி 13-ம் தேதியில், ஐவிசி ஃபில்ட்டர் பொருத்தப்பட்டு, தற்போது அவர் நலமுடன் உள்ளார். இந்த சிகிச்சையின் காரணமாக, வருங்காலத்தில் அவருக்கு நுரையீரல் ரத்தக் குழாயில் ரத்தம் உறையாமல் தடுக்க முடியும்.

இதனிடையே, வனிதா (64) என்பவர், நுரையீரல் ரத்தக்குழாயில் அடைப்பினால் பாதிக்கப்பட்டு இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, ஸ்ட்ரெப்டோகினேஸ் எனப்படும் ரத்த உறைதலை தடுக்கும் மருந்து அளிக்கப்பட்டது. அவரது இரத்த அழுத்தம் குறைவாக இருந்ததால், மெக்கானிக்கல் த்ராம்பெக்டமி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, ரத்தக் கட்டி அகற்றப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அவரது ரத்த அழுத்தம் சீரானது. இவரும் முழு ஆரோக்கியமடைந்து, வீடு திரும்பினார்.

இந்த உயரிய சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்வதற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் செலவாகும். ஆனால், இரண்டு பெண்களுக்கும் சேலம் அரசு மருத்துவமனயில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. உயரிய சிகிச்சையை வெற்றிகரமாக செய்த மருத்துவமனையின் இருதயவியல் துறைத்தலைவர் கண்ணன், துணை பேராசிரியர்கள் பச்சையப்பன், சரவண பாபு, ஞானவேல், சுரேஷ் பிரபு, தீபன், வீரமணி ஆகியோருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார். இந்நிகழ்வின்போது, இருதயவியல் துறை மருத்துவர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE