விருதுநகர் - சங்கரலிங்கபுரம் பேருந்துகளில் படியில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள்: எச்சரிக்கை

By KU BUREAU

விருதுநகர்: விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகரிலிருந்து சங்கரலிங்கபுரம் செல்லும் பேருந்துகளில் தினமும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தை உணராமல் படியில் தொங்கியபடி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்க கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகரிலிருந்து ஆர்.ஆர். நகர் வழியாக சங்கரலிங்கபுரத்துக்கு தினமும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளில் ஆர்.ஆர். நகர், இ.பி. பஸ் ஸ்டாப், காமராஜபுரம், காந்திர நகர், தம்மநாயக்கன்பட்டி, கன்னிச்சேரி, கன்னிச்சேரி புதூர், மேலசின்னையாபுரம், ஓ.கோவில்பட்டி, சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் தினந்தோறும் விருதுநகர் மற்றும் சாத்தூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று வருகின்றனர்.

காலை மற்றும் மாலை நேரங்களில் இப்பேருந்துகளில் வழக்கத்தைவிட அதிகமான கூட்டம் காணப்படும். இதனால், ஆர்.ஆர்.நகரிலிருந்து சங்கரலிங்கபுரம் வரை பேருந்தில் மாணவர்கள் அதிகமானோர் பயணிக்கின்றனர். இவர்களில் பலர் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியவாறு செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பலமுறை இதுபோன்று விபத்துகளும் நடந்துள்ளன.

எனவே, பேருந்துகளில் கூட்ட நெரிசலைக் குறைக்க விருதுநகர், சாத்தூரிலிருந்து ஆர்.ஆர். நகர் வழியாக சங்கரலிங்கபுரத்துக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE