ராஜபாளையம் | நீர்வழி பாதையில் சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

By KU BUREAU

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே மேலராஜ குலராமன் திருக்கோதையாபுரம் செங்குளம் கண்மாய் நீர்வரத்து கால்வாயில் சாலை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ராஜபாளையம் அருகே மேல ராஜகுல ராமன் ஊராட்சிக்குட்பட்ட திருக்கோதையாபுரம் செங்குளம் கண்மாய் மூலம் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இப்பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் நகருக்கு செல்வதற்காக கண்மாய் நீர்வரத்து ஓடையை ஆக்கிரமித்து பாதை ஏற்படுத்தி, தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மழைக்காலங்களில் மழை நீர் செல்ல முடியாமல் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்படும்.

இதனால் கால்வாய் அருகே வசிக்கும் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதால் அரசாணை எண்.504-ன் படி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE