வந்தவாசி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் தேர் தீப்பிடித்ததால் சலசலப்பு: பக்தர்கள் அதிர்ச்சி

By KU BUREAU

வந்தவாசி: வந்தவாசி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் மாசி மாதம் பிரம்மோற்சவ தேர் திருவிழா நடைபெற்ற நிலையில் நள்ளிரவில் தேர் தீப்பிடித்து எரிந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மாசி மாதம் பிரம்மோற்சவ விழா கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் 9-ம் நாளான நேற்று முன்தினம் 2 தேர்கள் வீதியுலா நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 2 தேர்களில் ஒன்றில் மனோன்மணி சமேத சோமாஸ்கந்தரும், மற்றொரு தேரில் பராசக்தி அம்மன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

வந்தவாசி தேரடி பகுதியில் இருந்து தொடங்கிய தேரோட்டம் பஜார் சாலை, அச்சரப்பாக்கம் சாலை, பாலு உடையார் தெரு, சன்னதி தெரு வழியாக பக்தர்கள் இழுத்தனர். தேர் வீதியுலா முடிவுற்ற நிலையில் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் நிலையை தேர் அடைந்தது.

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் விழா குழுவினர்கள் 2 தேர்களையும் கோயிலின் அருகே உள்ள நிலையில் நேற்று முன்தினம் இரவு நிறுத்தினர். தேர் நிறுத்தப்பட்ட நிலை இரும்பு ஷட்டரை பூட்டி விட்டுச்சென்றனர். இதற்கிடையில், நள்ளிரவில் தேர் மீது இருந்த துணிகள் திடீரென எரிய தொடங்கியது. அவ்வழியாகச் சென்றவர்கள் புகை அதிகளவில் வெளியேறுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி எரியத் தொடங்கியதால் தேர் இருந்த நிலைக்குள் செல்ல முடியவில்லை. இந்த தகவலறிந்த வந்தவாசி தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து சென்று தேர் நிறுத்தியிருந்த நிலையின் இருப்பு ஷட்டரின் பூட்டை உடைத்தனர்.

பின்னர், தீப்பற்றி எரிந்த தேரின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினர். இதுகுறித்த தகவலறிந்த வந்தவாசி தெற்கு காவல் துறையினர் விரைந்து சென்று தேர் தீப்பற்றி எரிந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்திருவிழா முடிந்த நிலையில் தேர் தீப்பற்றி எரிந்த நிகழ்வு பக்தர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE