குளங்களில் வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதி: தென்காசி ஆட்சியர் அறிவிப்பு

By KU BUREAU

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊருணி, குளம் மற்றும் கண்மாய்களில் விவசாய நிலங்களுக்கு தேவைப்படும் களிமண் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றை, விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் இலவசமாக எடுத்துக் கொள்ள தென்காசி மாவட்ட அரசிதழில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தென்காசி வட்டத்தில் 18, செங்கோட்டை வட்டத்தில் 8, கடையநல்லூர் வட்டத்தில் 11, ஆலங்குளம் வட்டத்தில் 16, வீரகேரளம்புதூர் வட்டத்தில் 12, சங்கரன்கோவில் வட்டத்தில் 26, சிவகிரி வட்டத்தில் 11, திருவேங்கடம் வட்டத்தில் 7 என, மொத்தம் - 109 குளம், ஊருணி, கண்மாய்களில் களிமண், வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

விவசாய பயன்பாட்டுக்கு நன்செய் நிலம் எனில் ஏக்கர் ஒன்றுக்கு 75 கன மீட்டர், ஹெக்டேர் ஒன்றுக்கு 185 கன மீட்டருக்கு மிகாமல் வண்டல் மண், களி மண் எடுக்க இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை அனுமதி வழங்கப்படும். புன்செய் நிலம் எனில் ஏக்கர் ஒன்றுக்கு 90 கன மீட்டர், ஹெக்டேர் ஒன்றுக்கு 222 கன மீட்டருக்கு மிகாமல் வண்டல் மண், களிமண் எடுக்க 2 ஆண்டுக்கு ஒருமுறை அனுமதி வழங்கப்படும்.

மண்பாண்ட தொழில் செய்ய 60 கனமீட்டருக்கு மிகாமல் களிமண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும். மேலும், களிமண் மற்றும் வண்டல் மண் எடுக்க அனுமதி கோரும் ஊருணி, குளம், கண்மாய் போன்ற நீர் நிலைகள் மற்றும் விண்ணப்பதராரின் மண்பாண்டத் தொழில் செய்யும் இடம் மற்றும் விவசாய நிலம் ஆகியவை, ஒரே வருவாய் வட்டத்துக்குள் அமைந்திருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

எனவே, விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் தங்களின் வட்டங்களில் அமைந்துள்ள அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள ஊருணி, குளம் மற்றும் கண்மாய்களில் கட்டணமின்றி களிமண் மற்றும் வண்டல் மண் எடுத்துக்கொள்ள tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக சம்மபந்தப்பட்ட வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்கலாம் என, தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE