திருச்சி: ஜீயபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 13 போலீஸார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் காவல் நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக உள்ள போலீஸார், உள்ளூர் பிரச்சினைகளில் தலையிடுவது, அதை பெரிதாக்குவது, ஒருதரப்புக்கு ஆதரவாக செயல்படுவது ஆகிய செயல்களில் ஈடுபடுவதாக பல்வேறு புகார்கள் திருச்சி எஸ்பி அலுவலகத்துக்கு சென்றன.
இந்நிலையில், ஜீயபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பாஸ்கர், கோபி, விஜய், ராஜமாணிக்கம், செந்தில்குமார் ஆகியோர் திருவெறும்பூர் காவல் நிலையத்துக்கும், செல்லதுரை, ராஜாங்கம், தம்புசாமி ஆகியோர் கொள்ளிடம் காவல் நிலையத்துக்கும், அருண்குமார், சதீஷ்குமார், முத்தழகன் ஆகியோர் சமயபுரம் காவல் நிலையத்துக்கும், கலைவாணி ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்து திருச்சி எஸ்.பி. செல்வநாகரத்தினம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.
» இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக விடுவிப்பு: மகிழ்ச்சி செய்தி!
» கூடாநட்பால் விபரீதம்: தேனி அருகே ரயில் முன்பு பாய்ந்து ஆண், பெண் தற்கொலை
இதுகுறித்து எஸ்பி அலுவலக வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘ஜீயபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸார் சிலர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள். சிலர் பல ஆண்டுகளாக இதே காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தனர். தவிர, திருவெறும்பூர், கொள்ளிடம் ஆகிய காவல் நிலையங்களில் போதிய போலீஸார் இல்லை.
ஜீயபுரம் காவல் நிலையத்தில் அதிகமான போலீஸார் இருந்தனர். மேலும் சிலர் மீது புகார்கள் வந்தன. இதையடுத்து, 13 போலீஸார் நிர்வாகக் காரணங்களுக்காக பணிமாற்றம் செய்யப்பட்டனர்’ என்றனர்.