ரூ. 29.25 கோடியில் உப்பனாறு பாலம்: அடிக்கல் நாட்டி புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதல்வர் தொடங்கி வைப்பு!

By அ.முன்னடியான்

புதுச்சேரி: ரூ. 29.25 கோடி மதிப்பில் உப்பனாறு பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் அடிக்கல் நாட்டும் பணியை தொடங்கி வைத்தனர்.

புதுச்சேரி உப்பனாறு வாய்க்கால் நகரின் முக்கிய பகுதிகளை இணைத்து செல்கிறது. இதனால் வாய்க்காலின் மீது பாலம் அமைத்தால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக இருக்கும் என அரசு முடிவு செய்தது. குறிப்பாக காமராஜர் சாலை மற்றும் மறைமலை அடிகள் சாலைகளை இணைக்கும் வகையில் உப்பனாற்றின் மேல் பாலம் அமைக்க கடந்த 2008-ல் அரசு திட்டமிட்டது. இதற்காக ரூ.3.50 கோடியில் பாலத்துக்கு பைல் பவுண்டேஷன் அமைக்கப்பட்டது. அதன்பிறகு பணிகள் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு 2016-ல் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் ஹட்கோ மூலம் ரூ.37 கோடி கடன்பெற்று மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

இந்த மேம்பாலம் 732 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் இருவழிச்சாலையாகவும், இருபுறமும் 1.50 மீட்டர் நடைபாதை இருக்கும் வகையிலும் கட்ட திட்டமிடப்பட்டது. பாலத்தின் பணிகளில் 85 சதவீதம் நடந்து முடிந்துள்ளது. காமராஜர் சாலை, மறைமலை அடிகள் சாலைகளை இணைக்கும் வகையில் சுமார் 50 மீட்டருக்கு பாலம் அமைக்க வேண்டும். பாலம் கட்ட மாநில அரசின் பங்கு தொகையில் ரூ.1.15 கோடி மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், மீதி ரூ.6 கோடி வழங்கப்படவில்லை. இதனால் 2019-ம் ஆண்டு இறுதியில் பாலத்தை கட்டி வந்த தனியார் நிறுவனம் பணிகளை நிறுத்தியது. இதனால் சுமார் 6 ஆண்டுளாக பாலம் பணி கிடப்பில் போடப்பட்டது.

இதையடுத்து இப்பாலப்பாலத்தை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து ராஜ்நிவாஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மீதமுள்ள பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதர பணிகளை முடிக்க ரூ. 29.25 கோடிக்கு டெண்டர் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் மத்திய கோட்டம் மூலம் புதுச்சேரி காமராஜர் சாலை முதல் மறைமலை அடிகள் சாலை வரை உள்ள 732 மீட்டர் நீளமுள்ள உப்பனாறு பாலத்தில் மீதம் உள்ள பணியை முடிப்பதற்கும், காமராஜர் சாலையில் பாலாஜி திரையரங்கம் அருகில் உள்ள பழைய பாலத்தை மறு கட்டமைக்கவும் ரூ. 29.25 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தனர். இதில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்எல்ஏ நேரு(எ) குப்புசாமி, தலைமை செயலாளர் சரத் சவுகான், பொதுப்பணித்துறை செயலர் முத்தம்மா, தலைமை பொறியாளர் தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளர் வீர செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE