திருவள்ளூர்: பள்ளிப்பட்டில் மின் கம்பத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட மின் வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம், பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே உள்ள தொட்டி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம் ( 46 ). இவர், தமிழ்நாடு மின்வாரியத்தில் பள்ளிப்பட்டு பகுதியில் வயர்மேனாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த விநாயகம், பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே உள்ள மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக மின் கம்பத்தின் மேல் சென்ற உயர் மின் அழுத்த கம்பியில், விநாயகத்தின் தலை உரசியது. இதனால், மின்சாரம் தாக்கி உடலில் தீப்பற்றி எரிந்து கீழே விழுந்த விநாயகம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, பள்ளிப்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.