கரூர் கோயிலில் எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யக்கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

By KU BUREAU

மதுரை: கரூர் கோயிலில் பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த அரங்கநாதன், தமிழக அரசின் தமிழ் வழியில் அர்ச்சராக பயின்று தற்போது திருவண்ணாமலை கோயிலில் அர்ச்சராக பணிபுரிந்து வருகிறார். இவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘கரூர் மாவட்டம், நேரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபா தரப்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், அவர்கள் உண்ட இலையில் பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்யவும் அனுமதிக்க கோரி மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் அனுமதி வழங்கியதால், கடந்த ஆண்டு மே 18ம் தேதி நடைபெற்ற நிகழ்வில், அவ்வாறு அங்கப் பிரதட்சணமும் செய்யப்பட்டது.

இங்கு 2015ம் ஆண்டு முதல் பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப் பிரதட்சணம் செய்யும் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். ஆனால் மனுதாரர் நீதிமன்றத்தை நாடி பழைய உத்தரவுகளை மறைத்து, தங்களுக்கு சாதகமான உத்தரவை பெற்றுள்ளனர். இந்த உத்தரவு பலராலும் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. எனவே பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்க பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதித்தும், ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்’ இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக கரூர் மாவட்ட ஆட்சியரும் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ் குமார், அருள் முருகன் அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில் நீதிபதிகள் இன்று அளித்த தீர்ப்பில், ‘எச்சில் இலையில் உருளுவதை வழிபாட்டு முறையாக கூறினாலும், அது சுகாதாரத்திற்கும், மனித மாண்புக்கும் உகந்தது அல்ல. ஏற்கனவே உச்சநீதிமன்றம் இது போன்ற நிகழ்வுகளுக்கு தடை விதித்துள்ளது. எனவே பக்தர்கள் உணவருந்திய எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அது போன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது’ இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE