காரைக்குடி அருகே தேசிக நாதர் கோயில் ராஜகோபுரத்தின் சிற்பங்கள் சேதம்: வலுக்கும் கண்டனம்

By KU BUREAU

காரைக்குடி: காரைக்குடி அருகே கோயில் ராஜகோபுரத்தின் சிற்பங்கள் சேதப்படுத்தியது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சூரக்குடியில் பிரசித்தி பெற்ற தேசிகநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த சிற்பங்களை நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் சேதப்படுத்தினர். இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் செட்டிநாடு போலீஸாரிடம் புகார் அளித்தனர். போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவத்தை சிவகங்கை மாவட்ட பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி மாவட்டத் தலைவர் பாண்டித்துரை கூறியதாவது: சூரக்குடி தேசிகநாதர் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக கோபுரங்களில் சிற்பங்கள் அமைக்கப்பட்டு வந்தன. இதனை மர்மநபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். ஏற்கெனவே கடந்த வாரம் திருப்புவனம் அருகே சுவாமி சிலை சேதப்படுத்தப்பட்டது. இந்து கோயில்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

தேசிகநாதர் கோயிலில் வழிபட்டு வரும் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சிற்பங்களை சேதப்படுத்தியது குறித்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கேள்வி எழுப்ப வேண்டும். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும். கோயிலுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். இல்லையெனில், நாங்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE