சொத்து வரி கட்டாவிட்டால் கட்டிடம் முன்பு குப்பைத் தொட்டி - மதுரை மாநகராட்சி அதிரடியும், தாக்கமும்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: சொத்து வரி கட்டாவிட்டால் கட்டிடம் முன்பு குப்பைத் தொட்டி வைக்கப்படும் மதுரை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை காரணமாக மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் சொத்துவரி நீண்ட காலம் கட்டாமல் பாக்கி வைத்துள்ள வணிக கட்டிடங்கள் மட்டுமில்லாது வீடுகள் முன்பும் மாநகராட்சி ஊழியர்கள் லாரிகளில் கொண்டு வருமு் 'குப்பை தொட்டி'களை வைத்து வரி கட்ட கூறி கட்டிட உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கையை தொடங்கியிருக்கிறார்கள்.

மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சொத்து வரி மூலம் ஆண்டிற்கு மாநகராட்சிக்கு ரூ.247 கோடி வருவாய் கிடைக்கிறது. கடந்த அரையாண்டு வரை ஓரளவு சொத்து வரி தீவிரமாக வசூல் செய்யப்பட்டதால் தமிழக அளவில் சொத்து வரி வசூலில், மதுரை மாநகராட்சி மூன்றாம் இடம்பிடித்தது. ஆனால், தற்போது சொத்து வரி வசூலில் மந்தம் ஏற்பட்டதால் 2 நிலை கீழே இறங்கி 5வது இடத்தில் மாநகராட்சி பின்னுக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

மத்திய அரசு மானியம் கிடைக்க, மாநகராட்சி கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 15 சதவீதம் சொத்து வரி வசூல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை மதுரை மாநகராட்சி மத்திய அரசு நிர்ணயித்துள்ள சொத்துவரி வசூல் இலக்கை எட்டாததால் ஆணையாளர் சித்ரா உத்தரவின்பேரில், 100 வார்டுகளிலும் சொத்து வரி வசூல் செய்வதற்கு தற்போது கிளர்க்குகள், பில்கலெக்டர்கள், சூப்பரெண்டுகள், வருவாய் பிரிவு உதவி அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருமே வரிவசூலில் களம் இறங்கி விடப்பட்டுள்ளனர்.

மண்டலம் வாரியாக ரூ.1 லட்சத்திற்கு மேல் அதிகம் சொத்துவரி பாக்கி வைத்துள்ள முதல் 50 முதல் 100 கட்டிட உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பவது, நேரடியாக மாநாராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகள் வீடு தேடி சென்று சொத்து வரி கட்ட எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி அறிவுறுத்தும் பணியும் நடக்கிறது. அதையும் மீறி கட்டாத கட்டிட உரிமையாளர்களை சொத்து வரி கட்ட வைப்பதற்கு, அவர்கள் கட்டிடங்கள் முன் குப்பை தொட்டிகளை வைக்கும் நடவடிக்கையை மாநகராட்சி தொடங்கியுள்ளது. ஒவ்வொரு வார்டுகளிலும் பில்கலெக்டர்கள் சொத்து வரி பாக்கி பட்டியலை கையில் எடுத்துக் கொண்டு அதிகாரிகள் மேற்பார்வையில் லாரிகளில் கொண்டு வரப்படும் குப்பைத் தொட்டிகளை, சொத்து வரி கட்டாமல் தாமதப்படுத்தும் கட்டிடங்கள் முன் இறக்கி வைத்து செல்கிறார்கள்.

குப்பைத் தொட்டிகளை வைப்பதால் சம்பந்தப்பட்ட சொத்து வரி கட்ட முடியாத வீடு, வணிக வளாகங்களுக்கு அதன் உரிமையாளர்கள், அன்றாடம் செல்லக்கூடியவர்கள் செல்ல முடியாமல் சிரமப்படுவார்கள். மேலும், கட்டிடங்கள் முன் வைப்பதால் குப்பை தொட்டியின் நாற்றத்தின் நெடி கட்டிடங்களின் உள்ளே யாரும் இருக்க முடியாத அளவிற்கு வீசும். மேலும், அக்கம், பக்கத்தில் வசிப்பவர்கள் மத்தியில் மாநகராட்சியின் இந்த குப்பை தொட்டி வைக்கும் நடவடிக்கையால் அவமானத்தையும் சம்பந்தப்பட்ட சொத்துவரி கட்டாதவர்களுக்கு ஏற்படுத்தக்கூடும். அதனால், ஓடி வந்து சொத்தவரியை கட்டுவார்கள் என்ற அடிப்படையில் மாநகராட்சி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கை, வரிவசூலில் முன்னேற்றத்தைக் கொடுத்தாலும், பொதுமக்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ''கட்டிட வரைப்படம் வழங்குவது முதல் சொத்து வரி நிர்ணயம் செய்தது, பெயர் குளறுபடி வரை முதல் மாநகராட்சியில் பல்வேறு குளறுபடிகுளும், முறைகேடுகளும் நடக்கிறது. மாநகராட்சியில் இன்னும் நகர் மற்றும் இணைக்கப்பட்ட புறநகர் வார்டுகளில் குடியிருப்பு சொத்து வரிகளிலே வணிக வரி கட்டிடங்கள் செயல்படுகின்றன. அந்த கட்டிடங்கள் மீது மாநகராட்சி வருவாய்துறைபிரிவு அதிகாரிகள் ஆய்வு நடவடிக்கை எடுக்காமல் கண்டும், கணாமல் உள்ளனர். அதுபோல், சொத்து வரி குறைத்து மதிப்பீட்டும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆணையாளர் தினேஷ்குமார், வரிவசூலோடு இந்த முறைகேடு கட்டிடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தார். ஆனால், தற்போது அந்த நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டு வரிவசூலில் மட்டும் மாநகராட்சி தீவிரம் காட்டுகிறது.

ஏராளமான கட்டிடங்களின் உரிமையாளர்கள் பெயர்கள் தவறுலாக குறிப்பிடப்பட்டு சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சொத்து வரி செலுத்தினால் மீண்டும் சொத்து வரி செலுத்தவில்லை என்று நோட்டீஸ் வருகிறது. மேலும், கட்டிட வரைப்படம் பெற்று கட்டிடம் கட்டி சொத்து வரி நிர்ணயம் செய்த கட்டிடங்களுக்கு, வரைப்படம் அனுமதியில்லை என்று கூறி மாநகராட்சி அபராதம் விதிக்கிறது. இதுபோன்ற பல்வேறு குளறுபடிகளாலே கட்டிட உரிமையாளர்கள் பலர் சொத்து வரி கட்டாமல் உள்ளனர்.

அவர்கள் சொத்து வரி செலுத்த தயாராக இருந்தும் அதிகாரிகள் தவறுகளை திருத்தம் செய்து கொடுக்காமலே சொத்து வரி கட்ட சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். கட்டாவிட்டால் வீட்டு குடிநீர் மற்றும் பாதாளசாக்கடை இணைப்பை துண்டிப்பது, குப்பை தொட்டிகளை வீட்டின் முன் வைப்பது போன்ற நடவடிக்களை எடுத்து அச்சுறுத்துகின்றனர். மன்னர் ஆட்சிகளில் கூட இதுபோன்ற நடவடிக்கை இருந்ததா என்று தெரியவில்லை. மக்களாட்சி நடக்கும் மதுரை மாநகராட்சியில் இதுபோன்ற நடவடிக்கையால் அதிருப்தியடைய வைத்துள்ளது. மக்கள் பிரநிதிகளும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காமல் உள்ளனர்,'' என்றனர்.

மாநகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, ''மின் கட்டணம் கட்டாவிட்டால் மின் இணைப்பை இதே அரசுதான் துண்டிக்கிறது. ஆனால், அதற்கு மட்டும் ஓடிச் சென்று கட்டணம் கட்டி மின் இணைப்பை பெறுகிறார்கள். சொத்து வரியை கொண்டுதான் மக்களுக்கான அடிப்படை பணிகள் நடக்கிறது. ஒவ்வொருவரும் இப்படி சொத்து வரி கட்டாவிட்டால் குப்பை பராமரிப்பு, குடிநீர் விநியோகம் போன்றவை மேற்கொள்வது. இந்த நடவடிக்கையும் கட்ட வைப்பதற்கு நிர்வாகத்தின் முயற்சிதான், மிரட்டும் நோக்கம் இல்லை,'' என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE