காரைக்கால் முற்றிலுமாக புறக்கணிப்பு: புதுச்சேரி சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ வருத்தம்

By KU BUREAU

புதுச்சேரி: சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, நிரவி - திருப்பட்டினம் திமுக எம்எல்ஏ நாக தியாகராஜன் பேசியதாவது: ஆளுநர் ஆற்றிய உரையில் நாங்கள் எதிர்பார்த்தது கடன் தள்ளுபடி, வட்டி தள்ளுபடி தான். கடந்த 4 ஆண்டுகளாக நடைபெறும் இந்த இரட்டை இன்ஜின் கொண்ட ஆட்சியில், நிதிச்சுமையை குறைப்பதற்காக கடன் அல்லது வட்டி தள்ளுபடி செய்து கொடுத்திருந்தால் மிகப்பெரிய அளவில் உட்கட்டமைப்பு வசதியை உருவாக்க முடியும் என்று எதிர்பார்க்கிறோம்.

காரைக்கால் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. புயல் நிவாரணமாக அனைத்து ரேஷன் கார்டுக்கும் ரூ.5 ஆயிரம் கொடுத்தோம். ஆனால், உயிரிழந்த ஆடு, மாடு, சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலையே நீடிக்கிறது. இதுவரை மழையின்போது சேதமடைந்த ஒரு வீட்டுக்கும் பணம் கொடுக்கவில்லை. இந்த ஆண்டாவது சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

இளையோருக்காக பல வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் காரைக்காலில் தினமும் பலர் வேலை கேட்டு எம்எல்ஏ அலுவலகத்துக்கு வருகின்றனர்.

நெல்லுக்கு அடிப்படை விலை நிர்ணயிக்க வேண்டும். காரைக்கால் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ்க்கு ஒட்டுநர் பிரச்சினை உள்ளது. ஆம்புலன்ஸ் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். காரைக்கால் அரசு மருத்துவமனையை ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனையாக மாற்ற வேண்டும்.

அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, ஒவ்வொரு பள்ளியாகச் சென்று ஆய்வு செய்தேன். அப்போது 100 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 12 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். 88 பேர் தேர்ச்சி பெறவில்லை.

மத்திய அரசு கூறியதால் சிபிஎஸ்இ திட்டத்தை செயல்படுத்தி விட்டோம். மாணவர்கள் தோல்வி அடைந்துவிட்டால் திரும்ப படிக்க மாட்டார்கள். வேலைக்கு சென்று விடுவார்கள். படிப்படியாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்தவில்லை. இதனால் 8, 9, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விட்டோம். அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE