பொள்ளாச்சி: பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான மு.கண்ணப்பன் முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளார்.
முன்னாள் மத்திய, மாநில அமைச்சரும், திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான மு.கண்ணப்பன், தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், செந்தில் பாலாஜி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, மடத்துக்குளம் ஆகிய ஆறு தாலுகாக்களை உள்ளடக்கிய புதிய வருவாய் மாவட்டம் உருவாக்க வேண்டும். இந்த புதிய மாவட்டம் நிலப்பரப்பு அடிப்படையில், கேரளா மாநில எல்லையும், கிழக்கில் அமராவதி நதி, தெற்கில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர், வடக்கில் கிணத்துக்கடவு பகுதியும் கொண்டதாக இருக்கும்.
மேலும் பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் இருந்து திருப்பூர் தனியாக பிரிக்கப்பட்டு மாவட்டமாக மாறியுள்ளது. தற்போது பொள்ளாச்சி மக்களவை தொகுதியில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, தொண்டாமுத்தூர், உடுமலை, மடத்துக்குளம் என ஆறு சட்டப்பேரவை தொகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. அத்துடன் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில், பரம்பிக்குளம், சோலையாறு, ஆழியாறு, திருமூர்த்தி, அமராவதி உள்ளிட்ட அணைகளின் பாசன நிலப்பரப்பு, பொள்ளாச்சி. உடுமலை ஆகிய பகுதிகளில் அடங்கி உள்ளது.
» ஆவினை திட்டமிட்டு அழிக்க கார்ப்பரேட்டுகள் சதி: பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு
» உதகையில் மலை ரயில் சேவை ரத்து: தண்டவாளத்தில் பாறை விழுந்ததால் பரபரப்பு!
பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளை உள்ளடக்கி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்பட்டு வருகிறது. இரு பகுதிகளிலும் தென்னை நார் தொழிற்சாலைகள் பிரதான தொழிலாக உள்ளன. பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்கள் பெரும்பான்மையானவை கோவை மண்டலத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற பல்வேறு காரணங்களின் அடிப்படையில் கொண்டு பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும். மேலும் கேரள மாநில அரசுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆனைமலையாறு, நீராறு - நல்லாறு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் இவ்விரு கோரிக்கைளையும் நிறைவேற்றிட வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.