அண்ணா இப்போது இருந்திருந்தால் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பார்: டிடிவி.தினகரன் தடாலடி!

By KU BUREAU

திருவாரூர்: அண்ணா இருந்திருந்தால் காலத்தின் தன்மை கருதி, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பார். மூன்றாவது மொழி அமல்படுத்துவது குறித்து பெற்றோர்கள், மாணவர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “பேரறிஞர் அண்ணா இருந்திருந்தால் காலத்தின் தன்மை கருதி, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பார். திமுகவினர் தொடர்புடைய பள்ளிகள், அவர்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகள் அனைத்திலும் மூன்றாவது மொழியாக இந்தி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

அனைத்து மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளிலும் மூன்றாவது மொழி பயிற்றுவிக்கப்படுகிறது. ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளில் மட்டும் மூன்றாவது மொழி பயிற்றுவிக்கப்படவில்லை. இது முற்றிலும் தவறானது. முதல்வர் ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால், மூன்றாவது மொழிக்கொள்கையை அனுமதிப்பது குறித்தும், இந்தியை பயிற்றுவிப்பது குறித்தும் பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்ய வேண்டும்.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழகத்தை பற்றி அவதூறாக எதையும் பேசவில்லை. புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதாக திமுக தலைமையிலான தமிழக அரசு ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளித்துவிட்டு, பின்னர் அதிலிருந்து பின்வாங்கி விட்டனர். இதைத்தான் மத்திய அமைச்சர் குறிப்பிடுகிறார்” என்றார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE