உதயநிதிக்கு வைக்கப்பட்ட 25 அடி உயர கட்அவுட்; பலத்த காற்றால் ஆட்டோ மீது சரிந்து விபத்து!

By KU BUREAU

திருவள்ளூர்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று வைக்கப்பட்ட பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர் சாலையில் சென்ற ஆட்டோ மீது விழுந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சாலையின் நடுவே அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர் சரிந்து, இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற பெண் மீது விழுந்தது. இதனால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து நிலையில், பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளான ஜெயகோபால் அவரது உறவினர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து திமுக நிகழ்ச்சிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது என திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது.

திமுக ஆட்சி அமைந்தது முதலே தொடர்ந்து அக்கட்சியின் சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பது அதிகரித்து வருகிறது. இந்த சூழலிதான் திருவள்ளூரில் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று வைக்கப்பட்ட பிளக்ஸ் கட் அவுட் பலத்த காற்றால் தாக்குப் பிடிக்க முடியாமல் அப்படியே சரிந்து ஆட்டோ மீது விழுந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் மத்திய அரசை கண்டித்து இன்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள உதயநிதி ஸ்டாலினும் வருவதாக கூறப்படும் நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து திருப்பாச்சூர் வரை 25 அடி உயரத்தில் ராட்சத கட்டவுட்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. இன்று பலத்த காற்று வீசிய நிலையில் சாலையில் வைக்கப்பட்டிருந்த உதயநிதி ஸ்டாலினின் பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது விழுந்தது. இதில் நல்வாய்ப்பாக ஆட்டோவில் பயணித்தோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘உதயநிதி அவர்களே, உங்களிடம் மனசாட்சியை எதிர்பார்ப்பது எங்கள் தவறாக கூட இருக்கலாம். ஆனால் உங்கள் அப்பாவும் நீங்களும் பேனரால் இறந்த சுபஸ்ரீ வீட்டுக்கு சென்று சுபஸ்ரீ பெற்றோரை சந்தித்து கொடுத்த வாக்குறுதிகளை ஞாபகப்படுத்துகிறோம்.

உங்களுடைய விளம்பரத்திற்காக எவன் செத்தால் எனக்கென்ன என்ற உங்கள் நிலைப்பாடு சரியா? மக்களுக்காக கட்சி நடத்துகிறீர்களா? அல்லது மக்களை போட்டு தள்ளும் கட்சி நடத்துகிறீர்களா?

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தலைமை காவல் அதிகாரிகளாகிய நீங்கள் எங்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு இப்படி திமுகவிற்கு வேலை பார்ப்பது சரியா? தினமும் சாப்பாடு உண்ணும் போது எங்கள் வரிப்பணத்தில் தான் அந்த சாப்பாடு உங்களுக்கு வந்தது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE