சென்னை: சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பாஜக நிர்வாகிகளை அதிமுக பொதுச்செயலாளர் சந்தித்தார்.
சென்னை திருவான்மியூரில் திருமண நிகழ்ச்சி ஒன்று இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்திருந்தார், அவரோடு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் வந்திருந்தார்.
இந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமியை பாஜக நிர்வாகி கரு.நாகராஜன் வாசலில் வந்து வரவேற்றார். அதுபோல இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுடனும், எடப்பாடி பழனிசாமி சிறிது நேரம் பேசினார்.
சமீப நாட்களாக அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் அமையும் என பேச்சுக்கள் எழுந்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி," திமுக மட்டும் தான் எங்களுக்கு எதிரி. எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்போம். அது குறித்து ஆறு மாதத்திற்கு பிறகு தெரிவிப்போம்”என பேசியிருந்தார். இதனை தொடர்ந்து பேசிய தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை," பாஜக நோட்டா கட்சி, தீண்டத்தகாத கட்சி, பாஜக வந்ததால் தான் நாங்கள் தோற்றோம் என பேசினார்கள். இன்று பாஜக கூட்டணி வேண்டுமென்று தவம் கிடக்கிறார்கள்” என பேசி இருந்தார்.
இது தொடர்பாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி," பாஜக கூட்டணிக்காக தவம் கிடக்கிறது என்று அண்ணாமலை அதிமுகவை குறிப்பிட்டாரா? தவறாக சொல்லாதீர்கள்.. ஆறு மாதங்களுக்குப் பின் தான் கூட்டணி குறித்து பேசப்படும்” என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இப்போது பாஜக நிர்வாகிகளை இபிஎஸ் சந்தித்தது சலசலப்பை உருவாக்கியுள்ளது.
» அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய வழக்கு: தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி கைது
» அரசு பள்ளிகளின் இணையவசதிக் கட்டணத்தை உள்ளாட்சிகள் செலுத்த வேண்டுமா? - ராமதாஸ் கண்டனம்