சென்னை: சீமான் அண்ணன் என் நல்ல நண்பர். தமிழக அரசியலில் திராவிட கட்சிகளை எதிர்த்தால் பலமுனை தாக்குதல் வரும். குறிப்பாக பெரியாரை கையிலெடுத்து விமர்சித்தால், பல முனைகளிலிருந்து தாக்குவார்கள். எனவே அவர் துணிவாக நிற்கவேண்டும் என்று சொன்னேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது காரில் புறப்பட்டுச் சென்றார். அப்போது எதிரே வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காரின் அருகே சென்றார்.
தொடர்ந்து காரின் கண்ணாடியை இறக்கி பேசிய சீமானின் கையைப் பிடித்த அண்ணாமலை, "அண்ணா ஃபைட் பண்ணிக்கிட்டே இருங்க.. விட்றாதீங்க.. ஸ்ட்ராங்கா இருங்க" என கூறிவிட்டுச் சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
இதனை தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ‘சீமான் அண்ணன் என் நல்ல நண்பர். தமிழக அரசியலில் திராவிட கட்சிகளை எதிர்த்தால் பலமுனை தாக்குதல் வரும். குறிப்பாக பெரியாரை கையிலெடுத்து விமர்சித்தால், பல முனைகளிலிருந்து தாக்குவார்கள். தனிப்பட்ட வாழ்க்கையின் உள்ளே செல்வார்கள். அவர் விவகாரத்தில் காவல்துறையின் அத்துமீறலை பார்த்தோம். ஒரு மனிதனை தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்தால், அவரின் மனது சோர்வடையும். எனவேதான் சீமான் அண்ணனிடம் உங்க பாணியில் நீங்கள் சென்றுகொண்டே இருங்கள் என்று சொன்னேன். சீமான், எங்கள் கட்சியையும், பிரதமரையும் தொடர்ந்து விமர்சனம் செய்தாலும் கூட, அடிப்படையில் திராவிட கட்சிகளை எதிர்த்து அவர் துணிவாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். எனவே அவர் துணிவாக நிற்கவேண்டும் என்று சொன்னேன். அவரின் பாதையில் அவர் செல்ல்ட்டும், எங்கள் பாதையில் நாங்கள் செல்கிறோம். தொடர்ச்சியாக தனிப்பட்ட தாக்குதல், அந்தரங்க விஷயங்கள், காவல்துறை அத்துமீறல் சோர்வடைய செய்யும். எனவே அவரிடம் அவ்வாறு சொன்னேன். அவரும் தமிழக மக்களுக்காகவே வேலை செய்கிறார்.அதனால்தான் அப்படி பேசினேன்” என்றார்
» காஞ்சியில் முக்கிய ரவுடி வெடிகுண்டு வீசி கொலை
» பேருந்துகளில் இலவச பயணம்: போலீஸாருக்கான நவீன அடையாள அட்டை திட்டத்தை தொடங்கிவைத்த காவல் ஆணையர்