மக்களவை தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: ஆதரவு கோரி ஒடிசா முன்னாள் முதல்வரை சந்தித்த திமுக குழு

By KU BUREAU

சென்னை: மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் தயாநிதி மாறன் எம்.பி ஆகியோர், ஆதரவு கோரி முதல்வரின் கடிதத்தை வழங்கினர்.

நாடு முழுவதும் 2026-ம் ஆண்டில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கணிசமான அளவுக்கு தொகுதிகள் குறைக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக கடந்த மாதம் இறுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மார்ச் 5-ம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதில், பேசிய முதல்வர் ஸ்டாலின், தென் மாநில எம்.பி.க்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினார். இதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

இதையடுத்து, அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானங்களுக்கு வலு சேர்ககும் வகையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட 7 மாநில முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

அதில், மார்ச் 22-ம் தேதி நடைபெறும் முதல் ஆலோசனைக் கூட்டத்தில், பங்கேற்க வரும்படி அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். இதற்கிடையே, கடந்த 9-ம் தேதி நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில், அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்க எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து, ஒவ்வொரு மாநிலத்துக்கும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் அடங்கிய குழு சென்று, மாநில முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து கூட்டு நடவடிக்கை குழு அமைப்பது குறித்து எடுத்துரைக்க உள்ளனர்.

இதில் முதல்கட்டமாக, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் தயாநிதி மாறன் எம்.பி ஆகியோர், ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கை நேற்று சந்தித்தனர். அப்போது கூட்டு நடவடிக்கைக் குழு தொடர்பாக எடுத்துரைத்து, முதல்வரின் கடிதத்தையும் அளித்தனர்.

அதைத்தொடர்ந்து, கர்நாடகாவுக்கு அமைச்சர் பொன்முடி மற்றும் அப்துல்லா எம்.பி ஆகியோர் இன்று சென்று முதல்வர் சித்தராமையாவைச் சந்திக்கின்றனர். நாளை தெலங்கானா செல்லும் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் என்.ஆர்.இளங்கோ எம்.பி ஆகியோர் முதல்வர் ரேவந்த் ரெட்டியைச் சந்திக்கின்றனர்.

அதேபோல், மேற்கு வங்கத்துக்கு கனிமொழி எம்.பி தலைமையிலும், கேரளாவுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையிலும், ஆந்திராவுக்கு அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான குழுவும் அடுத்தடுத்து செல்ல உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE