அஞ்சலகங்களில் இ-கேஒய்சி முறையில் சேமிப்புக் கணக்கு தொடங்கும் வசதி அறிமுகம்

By KU BUREAU

‘‘அஞ்சலகங்களில், காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில் இ-கேஒய்சி’ முறையில் சேமிப்புக் கணக்கு தொடங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது’’ என சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தெரிவித்ததாவது: அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு (ஆர்.டி.) உள்ளிட்ட சேமிப்பு கணக்குகள் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இந்தக் கணக்குகளை தொடங்க விரும்புவோர் தங்களுடைய முகவரி சான்றிதழ், ஆதார் எண் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்நிலையில், பேப்பர் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கை ‘இ-கேஒய்சி’ முறையில் தொடங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி கைவிரல் ரேகை (பயோ மெட்ரிக்) பதிவு மூலம் எளிதாக சேமிப்பு கணக்கு தொடங்கலாம்.

இதற்காக, சென்னை நகர அஞ்சல் வட்டத்துக்கு உட்பட்ட பாரிமுனையில் பொது அஞ்சலகம் (ஜிபிஓ), அண்ணசாலை, பார்க் டவுன், தி.நகர், மயிலாப்பூர், செயின்ட் தாமஸ் மவுண்ட், அம்பத்தூர், ஆவடி, தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரக்கோணம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், ஆரணி, திண்டிவனம் மற்றும் புதுச்சேரி ஆகிய 20 இடங்களில் உள்ள தலைமை அஞ்சல் நிலையங்களில் இந்த வசதி தொடங்கப்பட்டுப்பட்டுள்ளது.

இதன் மூலம், பொதுமக்கள் படிவம் பூர்த்தி செய்வதற்கும், கவுன்ட்டர்களில் நிற்பதற்கான நேரம் குறையும். மேலும், இம்மாத இறுதிக்குள் 557 துணை அஞ்சல் நிலையங்களிலும் இவ்வசதி ஏற்படுத்தப்படும்.

பயோ மெட்ரிக் முறையில் பொதுமக்கள் தங்கள் சேமிப்புக் கணக்கில் பணம் செலுத்தவும், பணம் எடுக்கவும் முடியும். இதற்காக, படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதுவரை இ-கேஒய்சி மூலம், சென்னை நகர அஞ்சல் வட்டத்துக்கு உட்பட்ட அஞ்சலகங்களில் 5,500 சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ், புதிய கணக்குகள் தொடங்க இதுவரை 3 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 12.609 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு நடராஜன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE