மேற்கு தொடர்ச்சி மலையில் வறண்ட ஆறுகள்: வனவிலங்குகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல்

By KU BUREAU

ஸ்ரீவில்லிபுத்தூர்: மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ஆறுகள் கோடை காலம் தொடங்கும் முன்பே வறண்டுவிட்டதால் வனவிலங்குகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய ராஜபாளையம், ஶ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஆகிய பகுதிகளில் தேவியாறு, நகரியாறு, அய்யனார் கோயில் ஆறு, ராக்காச்சி அம்மன் கோயில் ஆறு, செண்பகத்தோப்பு பேயனாறு, அத்திகோயில் ஆறு, அர்ஜுனா நதி, தாணிப்பாறை உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் மற்றும் நீரோடைகள் உள்ளன.

மேலும் சாஸ்தா கோயில் அருவி, மீன்வெட்டிப்பாறை அருவி உள்ளிட்ட 13 அருவிகள், சாஸ்தா கோயில் அணை, பிளவக்கல் அணை ஆகியவை உள்ளன. இதன் மூலம் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், வன விலங்குகளின் தண்ணீர் தேவையையும் பூர்த்தி செய்கின்றன.

இந்நிலையில், கடுமையான வெயில் காரணமாக கோடை காலம் தொடங்கும் முன்பே ஆறுகள் வறண்டு வருவதால் வனவிலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது. இதனால் மலையடிவாரப் பகுதிகளில் வனவிலங்குகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE