கட்சி துண்டு சர்ச்சை; கிருஷ்ணகிரி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றத்தை கண்டித்து சாலை மறியல்!

By KU BUREAU

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே அரசுப் பள்ளி ஆண்டு விழாவில், கட்சி துண்டு அணிந்து மாணவர்கள் நடனமாடிய விவகாரத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரை மீண்டும் அதே பள்ளியில் நியமிக்க வலியுறுத்திப் பெற்றோருடன் மாணவர்கள் தர்ணா மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் சோப்பனூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் கடந்த 4-ம் தேதி பள்ளி ஆண்டு விழா நடந்தது. இதில், நடந்த கலைநிகழ்ச்சியின்போது, அரசியல் கட்சி துண்டு அணிந்து மாணவர்கள் நடனமாடினர். இதுதொடர்பாக தலைமை ஆசிரியர் விஜயகுமார், பன்னிஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளிக்கும், விழா ஏற்பாடு செய்த பட்டதாரி ஆசிரியர் சுப்பிரமணி, மேட்டுப்புலியூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கும் இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், பள்ளிக்குப் பெற்றோருடன் நேற்று வந்த மாணவ, மாணவிகள் பள்ளியின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், தட்ரஅள்ளி-சப்பாணிப்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் கூறும்போது, “10-ம் வகுப்பு தேர்வு நடைபெற உள்ள நிலையில், தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் இடமாற்றம் செய்துள்ளது ஏற்புடையது அல்ல. ஏற்கெனவே, மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், ஒவ்வொரு மாணவ, மாணவிகள் கற்கும் நிலை அறிந்து அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது கடினம். எனவே, இடமாற்றம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரை மீண்டும் இதே பள்ளியில் நியமிக்க வேண்டும்” என்றனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் நாகலட்சுமி, நாகரசம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் சங்கீதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனிராஜ், மாவட்ட கல்வி அலுவலர் ராஜன் , கல்வி உதவி ஆய்வாளர் ஜெயராமன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், இதுதொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என உறுதியளித்தனர். இதையேற்று, மறியலைக் கைவிட்டு மாணவர்கள் வகுப்புக்குச் சென்றனர். மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE