மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, நெல்லித்துறை, சமயபுரம் பகுதிகளில் பாகுபலி என்றழைக்கப்படும் ஒற்றை யானையின் நடமாட்டம் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு வனத்தை விட்டு வெளியே வந்த பாகுபலி யானை, உதகை சாலையில் உள்ள தர்ப்பூசணி கடையில் பழங்களை சாலையில் இழுத்துபோட்டு உண்ண ஆரம்பித்தது.
இது குறித்து மேட்டுப்பாளையம் வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அங்கு சென்ற வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை காட்டிற்குள் விரட்டினர். இந்நிலையில், யானையை விரட்ட நீதிமன்ற தடையை மீறி அதன் மீது நெருப்பு விழும் வகையில் பட்டாசுகள் வீசப்பட்டதாக வன உயிரின ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.