சென்னை: தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் பரவலாக லேசானது முதல் கனமான மழை பெய்து வருகிறது.
டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவாரூர், குமரி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்று (11ம் தேதி) தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மழை எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரியில் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் நாளையும் (மார்ச் 12) பரவலாக மழைப் பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் கனமழை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் வேலூரில் மழைப் பொழிவு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தேனி, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் அதை ஒட்டியுள்ள உட்புற மாவட்டங்களிலும் மிதமான மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.