2026 அதிமுக ஆட்சியில் பிரேமலதாவுக்கு துணைமுதல்வர் பதவி:  தேமுதிக நிர்வாகி பரபரப்பு பேச்சு

By KU BUREAU

சென்னை: 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்று எங்கள் பொதுச்செயலாளர் பிரேமலதா துணை முதல்வர் ஆகவும் வாய்ப்பு உள்ளது எனவும் தேமுதிக இளைஞர் அணி துணை செயலாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்

அரியலூர் மாவட்டம், செந்துறையில் தேமுதிகவின் 25 ஆம் ஆண்டு கொடி நாள் வெள்ளி விழா பொதுக்கூட்டம், நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய தேமுதிக இளைஞர் அணி துணை செயலாளர் பாலமுருகன், “ எங்கள் பொதுச்செயலாளர் பிரேமலதாவை பற்றி பேச திருச்சி சிவாவுக்கு தகுதி இல்லை. எங்களுக்கு ராஜ்யசபா சீட் தருகிறார்கள் அல்லது தரவில்லை என்பது பற்றியெல்லாம் அவர் பேச தேவையில்லை. 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்று எங்கள் பொதுச்செயலாளர் பிரேமலதா துணை முதல்வர் ஆகவும் வாய்ப்பு உள்ளது.

தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்‌ பட்சத்தில், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பதவியை நமக்குள் பகிர்ந்து கொள்ளலாம் என்ற ரீதியில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்த அளவிற்கு இரண்டு கட்சியினரும் ஒன்றுமையாக உள்ளோம். எங்கள் அண்ணியார் இருக்கும் கூட்டணிதான் வெற்றி பெறும். அதிமுக -தேமுதிக இடையே என்ன‌ மாதிரியான ஒப்பந்தம் உள்ளது என்பது எங்களுக்கு தெரியும். வரும் 2026 தேர்தலில் அதிமுக கூட்டணியில்தான் இருப்போம். இந்த கூட்டணியை உடைக்கவே இப்போது இதுபோன்ற சர்ச்சைகளை உருவாக்க பார்க்கிறார்கள். திமுகவால் 2026 ஆட்சியமைக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்

பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி தரப்படும் என அக்கட்சியின் மூத்த நிர்வாகி வெளிப்படையாக பேசியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE