இபிஎஸ்ஸுக்கு ஷாக்: வைத்திலிங்கத்தை சந்தித்தபோது சசிகலா சொன்ன அந்த முக்கியமான விஷயம் என்ன?

By KU BUREAU

தஞ்சாவூர்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை சந்தித்த சசிகலா, “எதற்கும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் வருகிற சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடப் போகிறீர்கள்” என்று தெரிவித்துள்ளார். இது தற்போது அதிமுகவில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், தற்போது ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். அவருக்கு சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு ஓய்வெடுத்து வருகிறார்.

இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே தெலுங்கன்குடிகாட்டில் உள்ள தனது வீட்டில் வைத்திலிங்கம் தங்கியுள்ளார். அவரிடம் உடல்நலம் விசாரிக்க நேற்றிரவு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்றுவிட்டு திரும்பினார். அதன்பின்னர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தனது சகோதரர் திவாகரனுடன் சென்று வைத்திலிங்கத்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு இப்போது அரசியல் அரங்கில் அனலை கிளப்பியுள்ளது.

இந்த சந்திப்பின்போது, “எதற்கும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் வருகிற சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடப் போகிறீர்கள். நீங்கள்தான் மீண்டும் ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர். அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது” என்று வைத்திலிங்கத்துக்கு நம்பிக்கையூட்டும் விதமாக சசிகலா சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து சசிகலா செய்தியாளர்களிடம் கூறியதாவது, "அனைவரும் ஒன்றாக இணைந்து வருகின்ற 2026- சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியை அமைப்போம். அதற்கான நடவடிக்கைகளை நிச்சயமாக எடுப்போம். அதிமுக அணிகள் இணைப்பு பற்றி தொண்டர்களின் முடிவே இறுதியானது.

இந்த சந்திப்பு என்பது அனைத்தும் கலந்தது. அ.தி.மு.க மக்களுக்காக ஆரம்பித்த இயக்கம். தி.மு.க போல் இல்லை. நல்ல ஆட்சியை 2026ல் கொடுப்போம். அது மக்களாட்சியாக இருக்கும். அ.தி.மு.கவை சுக்குநுாறாக உடைத்து விடலாம் என்று வெளியில் சில பேர் நினைக்கலாம், அது எப்படி என்றால் கடலில் இருக்கு தண்ணீரை ஒரு பக்கெட்டில் எடுத்து வெளியேற்றிவிடுவேன் என்பது போல் தான். அ.தி.மு.க.,வை பொறுத்தவரை ஒருத்தர் முடிவு செய்யும் விஷயம் இல்லை. அடிமட்ட தொண்டன் என்ன முடிவு செய்கிறார்களோ அதுதான் அ.தி.மு.கவில் நடக்கும். அதை நாங்கள் நல்லபடியாக செய்வோம்” என்றார்.

வைத்திலிங்கம், சசிகலா, தினகரன் சந்திப்பு குறித்து அதிமுக மட்டுமின்றி, திமுக, பாஜக வட்டாரங்களும் உன்னிப்பாக கவனிக்க தொடங்கியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE