கோவையில் கால்பந்து விளையாடி மாணவர்களை ஊக்கப்படுத்திய ஆட்சியர்!

By இல.ராஜகோபால்

கோவை: கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர், திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டு கால்பந்து விளையாடி வீரர்களை ஊக்கப்படுத்தினார்.

நேரு விளையாட்டு அரங்கத்தில் ரூ.6.55 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை தடகள ஓடுபாதையை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஓடுபாதையின் நீளம் மற்றும் அகலம் மற்றும் பயிற்சி மேற்கொள்ளும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து விளையாட்டு அரங்கத்தில் பார்வையாளர்கள் அமரும் வசதிகள் குறித்து கேட்டறிந்து சிறிய பழுதுகளை நீக்க அறிவுறுத்தினார்.

மேலும், நேரு விளையாட்டு அரங்கத்தில் தங்கி பயிலும், மாணவர்களின் விடுதி, சமையல் கூடம் ஆகியவற்றை பார்வையிட்டார். சுகாதாரமான வகையில் உணவு வழங்குவதை உறுதி செய்யவும், முட்டை, கீரை வகைளை வாரத்துக்கு இருமுறை தவறாமல் வழங்கவும் அறிவுறுத்தினார். விளையாட்டு அரங்கத்தில் கால்பந்து விளையாடி கொண்டிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடி கால்பந்து விளையாடி ஊக்கமளித்தார்.

ஜிம்னாஸ்டிக், தடகளம், கூடைப்பந்து மற்றும் கையுந்துபந்து ஆகிய பயிற்சி மேற்கொண்டு இருந்த மாணவ, மாணவிகளிடம் விளையாட்டு துறையில் நம் நாடு பல்வேறு பதக்கங்களை பெற்று வருகிறது. அதேபோல் கல்வியுடன் விளையாட்டிலும் சாதிக்க ஆர்வத்துடன் பயிற்சி மேற்கொண்டு பெருமை சேர்க்க வேண்டும் என்றார். மேலும், மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர்களிடம் மைதானத்துக்கு கூடுதலாக என்னென்ன வசதிகள் தேவை என்பதனை கடிதம் மூலம் வழங்குமாறு அறிவுறுத்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE