இந்தி திணிப்பு நாடகம் தோல்வியால் உச்சகட்ட பதற்றத்தில் திமுக: வானதி சீனிவாசன் விமர்சனம்

By KU BUREAU

சென்னை: இந்தி திணிப்பு என்ற தங்களின் கூட்டு நாடகம் பெரும் தோல்வியடைந்துவிட்டதன் விளைவாக, அனைத்து அறிவாலய தலைவர்களும் உச்சகட்ட பதற்றத்தில் இருப்பதாகத்தான் தெரிகிறது. வெறும் பொய் பித்தலாட்டங்கள் மீதுதான் மொத்த திமுக அரசும் கட்டமைக்கப்பட்டுள்ள தோ என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் “தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் தமிழக மாணவர்களைத் தவறாக வழிநடத்தும் திமுக-வினரின் போக்கு நாகரீகமற்றது” என்ற தொனியில் நமது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் கூறிய கருத்துக்களை, முன்னுக்குப் பின் முரணாக மாற்றிக் கூறி மக்கள் மத்தியில் பிரிவினையை தூண்டி வருகிறது திமுக அரசு.

ஹிந்தி திணிப்பு என்ற தங்களின் கூட்டு நாடகம் பெரும் தோல்வியடைந்துவிட்டதன் விளைவாக, அனைத்து அறிவாலய தலைவர்களும் உச்சகட்ட பதற்றத்தில் இருப்பதாகத்தான் தெரிகிறது. அதனால் தான், கையில் கிடைக்கும் ஏதாவதொரு விஷயத்தை திரித்து கட்டுக்கதை கட்டி மக்களை திசைதிருப்பி தங்கள் அரியணையைக் காப்பாற்றிக் கொள்ள அரும்பாடுபடுகிறார்கள்.

அதிலும் குறிப்பாக, கடந்த பிப்ரவரி 2024-இல் PM SHRI பள்ளிகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்புவதாக திமுக அரசு கடிதம் எழுதியதை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்திவிட்டார் என்ற ஒரே அச்சத்தில் தான், நமது மத்திய அமைச்சர் குறித்த ஒரு பொய்யான வதந்தியைப் பரப்ப முழுவீச்சில் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று உடனுக்குடன் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள் இந்த அறிவாலய தலைவர்கள் என்பதை மக்களும் நன்கறிவார்கள்.

காரணம், திமுக-வின் இரட்டைவேடத்தை தோலுரித்த நமது மத்திய அமைச்சரின் அறச்சீற்றம், பல தமிழகப் பெற்றோர்களின் எண்ணவோட்டமாகவே இருக்கிறது. தங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்கும் சிறந்த கல்வியை இந்த ஆளும் அரசு ஏதேதோ காரணங்களைக் காட்டி முட்டுக்கட்டை போட்டு தடுக்கிறதே என்ற தங்களின் மனக்குமுறலாகத் தான், தமிழக மக்கள் அவரின் விமர்சனத்தைப் பார்க்கிறார்கள் என்பது தான் நிதர்சன உண்மை.

ஆக, திராவிட மாடல் அரசு என்னதான் தகிடுதத்தம் செய்தாலும் அவர்களின் வெறுப்பரசியலை மக்கள் இனி சகித்துக் கொள்ளமாட்டார்கள் என்பதை ஆளும் அரசு உணரவேண்டும்’ என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE