சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.6000 கொள்முதல் விலையாக வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘தமிழ்நாட்டில் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.6000 கொள்முதல் விலையாக வழங்க வேண்டும் என்றுகோரி கரும்பு உற்பத்தி செய்யும் வேளாண் பெருங்குடி மக்கள் போராடிவரும் நிலையில், மிகக்குறைந்த அளவாக ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள ரூ.3150 மட்டுமே கொள்முதல் விலையாக வழங்க தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு கரும்பு கொள்முதல் விலையாக சர்க்கரை பிழிதிறனைப் பொறுத்து 3400 முதல் 3150 வரை கொள்முதல் விலையாக நிர்ணயித்துள்ளது. ஆனால், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள், மாநில அரசின் பங்குத்தொகையைத் சேர்த்து 4000 ரூபாய் அளவிற்கு கரும்பு விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றன.
ஆனால், கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலின்போது கரும்புக்கு கொள்முதல் விலையாக ரூபாய் 4000 வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிப்பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளாகியும் இன்றுவரை அதனை நிறைவேற்றாமல் கரும்பு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் புரிந்துவருகிறது.
தமிழ்நாட்டில் கரும்புக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயிக்கும் முறை கடந்த அதிமுக ஆட்சியில் கைவிடப்பட்டது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கும்முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை அளித்து ஆட்சி அதிகாரத்தை அடைந்த திமுக, அதனையும் நிறைவேற்றாமல் கரும்பு விவசாயிகளின் வயிற்றில் அடித்துவருவது கொடுங்கோன்மையாகும்.
» திமுகவினர் நேர்மை, நாகரீகமற்றவர்கள் என சொன்னது உண்மைதானே? -முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி
» திருத்தணி சந்தைக்கு ‘பெருந்தலைவர் காமராஜர்’ பெயர்தான் சூட்டப்படும்: வெளியானது அறிவிப்பு
திமுக அரசு அமைந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தேர்தல் நேரத்து தந்திரமாக பொய் வாக்குறுதி அளித்து இன்றுவரை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. ஆனால், ஆட்சிப்பொறுப்பேற்று 4 ஆண்டுகளாகியும் கரும்புக்கு குறைந்தபட்ச கொள்முதல் ஆதாரவிலையைக்கூடவா திமுக அரசால் நிர்ணயிக்க முடியவில்லை ?
குறைந்தப்பட்ச ஆதாரவிலையை நிர்ணயிப்பதில் திமுக அரசுக்கு என்ன தயக்கம் இருக்கிறது ? இன்னும் எத்தனை தேர்தல் வாக்குறுதியை இதுபோல் நிறைவேற்றாமல் திமுக அரசு மக்களை ஏய்க்கப்போகிறது ? இதுதான் இந்தியாவே திரும்பி பார்க்கும் திராவிட மாடல் ஆட்சியா ?
கடந்த 2021-22 நிதியாண்டில் கரும்பு கொள்முதல் விலையாக இந்திய ஒன்றிய அரசு வழங்கிய ரூ.2755 உடன், திமுக அரசு தனது பங்காக வெறும் ரூ.155 மட்டும் சேர்த்து ரூ.2,950 மட்டுமே கொள்முதல் விலையாக வழங்கியது. தற்போது ஒன்றிய அரசு ரூ.3150 வழங்கும் நிலையில், முன்பு வழங்கிய குறைந்தபட்ச ஊக்கத்தொகையைக்கூட திமுக அரசு வழங்க மறுத்து வெறும் 3150 ரூபாய் மட்டுமே கொள்முதல் விலையாக அறிவித்துள்ளது கொடுங்கோன்மையாகும்.
ஒரு டன் கரும்பு உற்பத்தி செய்யவே ரூ.3500 வரை செலவாகும், ஒன்றிய - மாநில அரசுகளின் சிறிதும் மனச்சான்றற்ற விலை நிர்ணயம் காரணமாக, போதுமான கொள்முதல் விலை கிடைக்காமல் நட்டம் ஏற்படுவதால் பெரும்பாலான தமிழ்நாட்டு கரும்பு விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாகவே கரும்பு சாகுபடி பரப்பை பெருமளவு குறைத்துவிட்டனா். மேலும், உற்பத்தி செலவு, உழவுக் கூலி, வெட்டுக் கூலி, வாகன வாடகை, எரிபொருள் விலை போன்றவை அதிகரித்துள்ளதால் இனிவரும் காலத்தில் மேலும் குறைந்து, தமிழ்நாட்டில் கரும்பு விவசாயமே இல்லாது போகும் அவலநிலை ஏற்படக்கூடும்.
கார் பந்தயத்திற்கு பல நூறுகோடிகளைக் கொட்டும் திமுக அரசு, கரும்பு கொள்முதலுக்கு உரிய விலை வழங்க சில நூறு கோடிகளை ஒதுக்குவதில் என்ன சிக்கல்? வெறும் 3150 ரூபாயை கொள்முதல் விலையாக இந்திய ஒன்றிய பாஜக அரசு நிர்ணயிப்பதும், ஊக்கத்தொகை ஏதும் வழங்காமல் அதை அப்படியே திமுக அரசு வழிமொழிவதும் கரும்பு விவசாயிகளைக் கசக்கிப்பிழிந்து குருதியைக் குடிக்கும் கொடுஞ்செயலாகும்.
ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.5000 கொள்முதல் விலையாக நிர்ணயிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு தன் பங்கிற்கு ரூ.1000 ஊக்கத்தொகையாகச் சேர்த்து தமிழ்நாட்டில் கரும்பு உற்பத்தி செய்யும் வேளாண் பெருங்குடி மக்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய ரூ.6000 கொள்முதல் விலையாக வழங்கி கரும்பு விவசாயம் அழிந்துபோகாமல் காக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை மீதமிருக்கும் ஓராண்டிலாவது நிறைவேற்றும் விதமாக, கரும்பு கொள்முதலுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம் செய்யும் முறையை தமிழ்நாட்டில் உடனடியாக மீண்டும் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.