புதுவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 27 வரை 13 நாட்களுக்கு நடக்கிறது: பேரவைத்தலைவர் அறிவிப்பு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 27-ம் தேதி வரை 13 நாட்களுக்கு நடக்கிறது என்று பேரவைத்தலைவர் செல்வம் தெரிவித்தார். புதிய சட்டப்பேரவையை ரூ. 657கோடிக்கு கட்ட மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கியது.
துணைநிலை ஆளுநர் உரையை தொடர்ந்து சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக்கூட்டம் பேரவைத்தலைவர் செல்வம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பேரவைத் தலைவர் செல்வம் கூறியதாவது: புதுவை சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் 27-ம் தேதி வரை நடக்கிறது.

செவ்வாய்க்கிழமை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது. 12-ம் தேதி நிதி பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 13-ம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. விடுமுறை நாட்களைத் தவிர்த்து ஒட்டுமொத்தமாக 13 நாட்கள் பேரவை நடக்கிறது. பட்ஜெட்டுக்கு கடந்த சனிக்கிழமை அனுமதி கிடைத்துவிட்டது. ரூ.13 ஆயிரத்து 600 கோடிக்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார்.

புதிய சட்டப்பேரவை வளாகம் தட்டாஞ்சாவடியில் உள்ள 13.50 ஏக்கரில் 3.45 ஏக்கரில் கட்டப்பட உள்ளது. இதற்காக திருத்தி அமைக்கப்பட்ட திட்ட மதிப்பீடு ரூ.657 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சகம் ஒப்புதல் பெற கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதுவை சட்டப்பேரவையில் கடந்த ஆட்சிகளில் நிறைவேற்றப்பட்ட மாநில அந்தஸ்து தொடர்பான 13 தீர்மானங்கள் மத்திய அரசுக்கே அனுப்பப்படவில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகே 2022-ல் முதல்முறையாக மாநில அந்தஸ்து தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு மத்திய அரசு தற்போதைய நிலையே தொடரும் என தெரிவித்துள்ளது. தீர்மானம் நிறைவேற்றினால் மாநில அந்தஸ்து தர வேண்டும் என்பது இல்லை. இதற்காக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். டெல்லியில் பிரதமரை சந்திக்க அனுமதி கோரியுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் டெல்லி சென்று பிரதமரை சந்திப்போம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE