சேதமடைந்த விஏஓ அலுவலகத்தை சொந்த செலவில் சீரமைத்த கள்ளராதினிபட்டி இளைஞர்கள்: சிவகங்கை நெகிழ்ச்சி

By KU BUREAU

சிவகங்கை: சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலகத்தை சீரமைக்க பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், கிராம இளைஞர்களே தங்களது சொந்த செலவில் சீரமைத்தனர்.

சிவகங்கை அருகே கள்ளராதினிபட்டியில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் பராமரிப்பின்றி சேதமடைந்தது. இதனால், மழைக் காலங்களில் மேற்கூரையிலிருந்து தண்ணீர் ஒழுகி, ஆவணங்கள் சேதமடைந்தன. மேலும், மேற்கூரை சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்ததால், அலுவலகத்துக்கு வரவே கிராம நிர்வாக அலுவலர், கிராம மக்கள் அச்சமடைந்தனர்.

இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலகம் சிவகங்கையில் செயல்பட்டதால், கிராம மக்கள் அங்கு சென்றுவர வேண்டிய நிலை ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர், வருவாய்த் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும், கிராம நிர்வாக அலுவலகத்தை அதிகாரிகள் சீரமைத்து கொடுக்கவில்லை.

அதிகாரிகளை நம்பி பயனில்லை என்று முடிவு செய்த கிராம இளைஞர்கள், தாங்கள் நடத்தி வரும் கே.கே.சி. சமூக சேவை மையம் மூலம் அலுவலகத்தை சீரமைக்க முடிவு செய்தனர். தொடர்ந்து, வெளிநாடுகளில் வேலை செய்யும் இளைஞர்கள், உள்ளூர் இளைஞர்கள் மூலம் ரூ.1.32 லட்சம் வசூலித்து, அந்த பணத்தில் கிராம நிர்வாக அலுவலகத்தை சீரமைத்தனர்.

இது குறித்து கிராம இளைஞர்கள் கூறுகையில், "சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலகத்துக்கு கிராம நிர்வாக அலுவலர் வர மறுத்துவிட்டார். இதனால், அனைத்து தேவைகளுக்கும் சிவகங்கைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. அலுவலகக் கட்டிடத்தை சீரமைக்க பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால், நாங்களே சீரமைத்தோம்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE