விருதுநகர்: அருப்புக்கோட்டை நான்கு வழிச் சாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆக்சிஜன் டேங்கர் லாரி மீது மற்றொரு லாரி மோதியதால் விபத்து ஏற்பட்டது. டேங்கர் லாரியில் இருந்து ஆக்சிஜன் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூரிலிருந்து தூத்துக்குடிக்கு செல்ல உள்ள தனியார் கேஸ் நிறுவனத்திற்கு மருத்துவ ஆக்சிஜன் ஏற்றி வந்த லாரி இன்று காலை மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் கஞ்சநாயக்கன்பட்டி விளக்கு பகுதியில் நின்றிருந்தது. அப்போது, கொல்கத்தாவிலிருந்து தூத்துக்குடிக்குப் பனை ஓலை கைவினை பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்காக வந்த மற்றொரு லாரி டேங்கர் லாரியின் பின்பக்கத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இரண்டு லாரியின் ஓட்டுநர்களுக்குக் காயம் எதுவும் இல்லை. ஆனால் டேங்கர் லாரியில் இருந்து ஆக்சிஜன் வெளியேறியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த அருப்புக்கோட்டை தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து கசிந்து வரும் ஆக்சிஜன் டேங்கர் லாரி மீது தண்ணீரைப் பீச்சி அடித்துக் கட்டுப்படுத்தினர்.
மேலும், அந்த பகுதியில் பயணிகள் யாரும் செல்ல வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். வாகனங்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இந்த விபத்து குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
» நத்தத்தில் உயிரிழந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரியின் உடல் தானம்: மாணவர்களின் கல்விக்காக வழங்கல்
» வீட்டுக்கு ஒரு இலவச இன்வெர்ட்டர் கொடுக்க வேண்டும்: அரசுக்கு அதிமுக கோரிக்கை