சென்னை: இந்தாண்டு இறுதிக்குள் 3 ஆயிரம் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை பாடி திருவல்லீஸ்வரர் கோயிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் திருக்குளம் சீரமைத்தல், புதிய நீராழி மற்றும் காரிய மண்டபம் கட்டுவதற்கான பணியையும், ரூ.85 லட்சம் செலவில் புதிதாக திருத்தேர் செய்கின்ற பணியையும் மற்றும் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கைலாசநாதர் கோயிலை உயர்த்தி கட்டுவதற்கான பணிகளையும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை 2,664 கோயில்களில் கும்பாபிஷேகம் முடிவுற்றுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக கும்பாபிஷேகத்தின் எண்ணிக்கை நிச்சயம் 3 ஆயிரத்தை தாண்டும். மேலும், திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு சுமார் 114 தேர்கள், ரூ.74 கோடி செலவில் புதிதாக உருவாக்கப் பட்டிருக் கின்றது. திருத்தேர் மராமத்து பணிக்கு மட்டும் சுமார் ரூ.16 கோடி செலவில் 64 தேர்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு பணிகள் நிறைவுற்றிருக்கின்றன.
மேலும், 5 தங்கத் தேர்கள் ரூ.31 கோடி செலவிலும், 9 வெள்ளித்தேர் ரூ.29 கோடி செலவிலும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதுவரை நான்கு குளங்கள் ரூ.4.20 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருகின்றன. சுமார் 1,19,761 இடங்களில் நிலங்களுக்கான அளவை கற்கள் பதிவிடப் பட்டிருக் கின்றன. நில அளவை மூலம் 1,82,490.76 ஏக்கர் நிலங்கள் அளவிடப்பட்டு கற்கள் நடப்பட்டு, அவை எந்த கோயிலுக்கு சொந்தமானது என்று பதாகைகளாக வைத்திருக்கின்றோம்.
» பிக்பாஸ் விக்ரமனின் படு வைரலான ‘சர்ச்சை’ வீடியோ - போலீஸில் புகாரளித்த பின் மனைவி விளக்கம்!
ரூ.7,196 கோடி மதிப்பிலான 7,437 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. அந்தவகையில், சுமார் ரூ.5,710 கோடி அளவுக்கு இதுவரையில் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.