சென்னை: அடுக்குமாடி குடியிருப்பில் பிக்பாஸ் பிரபலமும், விசிக பிரமுகருமான விக்ரமன் பெண் வேடமிட்டு, ஆண் ஊழியரை பாலியல் ரீதியாக தாக்க முற்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், இதில் வதந்தி பரப்புவோர் மீது விக்ரமனின் மனைவி ப்ரீத்தி கரிகாலன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை அய்யப்பன்தாங்கலை அடுத்த அடுக்குமாடி குடியிருப்பில் தேசிய விருதுபெற்ற இயக்குநர் ராஜு முருகன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ராஜு முருகனின் மனைவி பெயர் ஹேமா சின்ஹா. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சில பாலியல் ரீதியிலான குற்ற சம்பவங்கள் நடப்பதாக ராஜு முருகனின் மனைவி ஹேமா குற்றம்சாட்டி உள்ளார். இதுபற்றி அவர் அடுக்குமாடி குடியிருப்பு சங்க நிர்வாகிகளிடம் புகார் அளித்து பாலியல் ரீதியான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறினார். இதுதொடர்பாக புகார் அளித்த ராஜு முருகனின் மனைவி ஹேமாவுக்கு குடியிருப்பு சங்க நிர்வாகிகள் மனஉளைச்சலை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ராஜு முருகனின் மனைவி ஹேமா சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், ‛‛ இந்த குடியிருப்பில் 3 மாதத்துக்கு ஒருமுறை பராமரிப்புதொகை வசூலிக்கப்படுகிறது. மூன்று மாதத்துக்கு ஒருமுறை ரூ.22 ஆயிரம் பராமரிப்பு தொகை கொடுத்தும் கூட குப்பையை சரியாக அகற்றுவது இல்லை. மின்சார பிரச்சனையை சரிசெய்யவில்லை. அடுக்குமாடி குடியிருப்பு வளாக நீச்சல் குளத்தில் எனது குழந்தைகளை தடுக்கின்றனர். இதுபற்றி கேள்வி கேட்டால் மனஉளைச்சலை குடியிருப்பு சங்க நிர்வாகிகள் தருகின்றனர். போலீசில் புகார் அளித்தாலும் குடியிருப்பு நிர்வாகிகள் பேசி நடவடிக்கை எடுக்காதபடி தடுக்கின்றனர்'' என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் சில வீடியோக்கள் வெளியானதாக சொல்லப்படுகிறது. அதில், 2024ம் ஆண்டு மே மாதம் வரை இக்குடியிருப்பில் வசித்த பிக்பாஸ் பிரபலமும், விசிக பிரமுகருமான விக்ரமன் பெண் வேடமிட்டு, ஆண் ஊழியரை பாலியல் ரீதியாக தாக்க முற்பட்டதாக தகவல்கள் பரவின. இந்த சம்பவத்தின்போது அவரை கையும் களவுமாக பிடித்ததாகவும், இதனை வீடியோ எடுத்தவர்களை மிரட்டி பெரும் தொகை கொடுத்து வீடியோக்களை அழித்ததாகவும் தகவல் வெளியானது.
» ‘82 வயதாகிவிட்டதே, இனி என்ன செய்வார் என நினைக்காதீர்கள்’ - சென்னையில் இளையராஜா முக்கிய அறிவிப்பு!
» உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளை இணைத்து உருவாகிறதா பழநி மாவட்டம்? - வைரல் கடிதம்
ஆனால் இந்த தகவல்களை முற்றிலுமாக மறுத்த பிக்பாஸ் விக்ரமன், ‘சினிமா படப்பிடிப்பு சம்மந்தமாக நடந்த ஒன்றை அடிப்படை ஆதாரமின்றி, உண்மைத் தன்மையை ஆராயாமல் எந்த அறமும் இன்றி சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என்னைப் பற்றி அவதூறு பரப்புவதை விடுத்து வேறு வேலை இருந்தால் பாருங்கள்’ என தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் சில நிமிடங்களில் இந்த பதிவினை அவர் நீக்கினார். இதனையடுத்து அவர், ‘சினிமா படப்பிடிப்பு சம்மந்தமாக நடந்த ஒன்றை வைத்து அடிப்படை ஆதாரமின்றி அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அறத்தின்படி செயல்பட்டு துரிதமாக நடவடிக்கை எடுத்த பாலிமர் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றி’ என பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இது தொடர்பாக வதந்தி பரப்பியவர்கள் மீது விக்ரமன் மனைவி ப்ரீத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘ நாங்கள் முன்பு குடியிருந்த அபார்ட்மெண்டில் நாங்கள் ஷூட்டிங்கிற்காக எடுத்த வீடியோவை வேறு விதமாக டேக் செய்து அவதூறு பரப்பியுள்ளனர். இந்த வீடியோவை ஒளிபரப்பிய நாங்கள் உடனடியாக அந்த டிவி சேனலை அணுகினோம், அவர்களும் அந்த வீடியோவை நீக்கினார்கள். இது தொடர்பாக நாங்கள் இப்போது புகாரளித்துள்ளோம். எங்கள் இருவருக்கும் நிச்சயம் ஆகியிருந்த சமயத்தில், நான் மதுரையில் இருந்ததால், டெஸ்ட் ஷூட்டுக்காக ஷூட்டிங் தொடர்பாக இந்த வீடியோவை எடுத்து அனுப்பினார்கள். அப்போது அந்த குடியிருப்பில் இருந்தவர்கள் எதையும் தீர விசாரிக்காமல் இவரை தாக்கினார்கள், அதுதான் குற்றம். இந்த சம்பவம் நடந்து 6 மாதங்களுக்கும் மேல் ஆகிறது. இப்போது நாங்கள் வேறு வீட்டுக்கு வந்துவிட்டோம். இப்போது சம்பந்தமே இல்லாமல் இதை பிரச்சினையாக்கியுள்ளார். குடியிருப்பு நிர்வாகத்தின்மீது அவர்கள் புகாரளித்தபோது, தேவையின்றி இந்த வீடியோவை பரப்பியுள்ளனர். இதுபற்றி விசாரிக்கவே புகாரளித்துள்ளோம்’ என்றார்.