திண்டுக்கல்: நத்தத்தில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் பச்சைமுத்து என்ற தவமணியின் உடல் மருத்துவ மாணவர்களின் கல்விக்காக தானமாக வழங்கப்பட்டது.
திண்டுக்கல்லை அடுத்த நத்தம் அருகேயுள்ள வெள்ளக்குட்டு பகுதியைச் சேர்ந்தவர் பச்சை முத்து என்ற தவமணி (58). இவர் நத்தம் நெடுஞ்சாலைத் துறை அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார். இவர் சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இந்நிலையில் அவர் எழுதிய கடிதம் நேற்று கிடைத்துள்ளது.
அதில் அவர், தனது இறப்புக்கு பின்னர் தனது உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்விக்கு பயன்பெறும் வகையில் தானமாக வழங்க வேண்டும் என எழுதி இருந்தார். எனவே, அவரது விருப்பப்படி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரிக்கு நேற்று குடும்பத்தார் ஒப்புதலுடன் அவரது உடல் தானமாக வழங்கபட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.