உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளை இணைத்து உருவாகிறதா பழநி மாவட்டம்? - வைரல் கடிதம்

By KU BUREAU

திருப்பூர்: உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளை இணைத்து, புதிதாக பழநி மாவட்டம் உருவாக்குவது தொடர்பாக திண்டுக்கல் ஆட்சியர், சார் ஆட்சியருக்கு அனுப்பிய கடிதம் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

பழநியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டு, அதில் உடுமலை, மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதிகள் இணைக்கப்படும் என கடந்த சில வாரங்களாக தகவல் பரவிவருகிறது. இவ்விவகாரம் உடுமலை மக்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உடுமலையில் வியாபாரிகள், பல்வேறு அமைப்புகள், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இது தொடர்பாக, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் உடுமலை, மடத்துக்குளம் தொகுதி மக்கள் பாதுகாப்பு பேரவை தொடங்கப்பட்டு தொடர் நடவடிக்கைகளை மேறகொண்டு வருகின்றனர்.

பழநி மாவட்டம் தொடர்பாக அரசு தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், பழநி சார் ஆட்சியருக்கு ஜனவரி 1-ல் அனுப்பிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கடிதத்தில் கூறியிருப்பதாவது, ‘திண்டுக்கல் மாவட்டம் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளையும், திருப்பூர் மாவட்டம் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் உள்ளடக்கிய பெரிய மாவட்டங்களாக உள்ளன. எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரம், பழநி, திருப்பூரில் இருந்து மடத்துக்குளம், உடுமலை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளை பிரித்து புதிய பழநி மாவட்டம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்க ஆவன செய்யுமாறு கேட்டு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக சாத்தியக் கூறுகள் இருப்பின் புதிய பழநி மாவட்டம் பிரிப்பது தொடர்பான விரிவான அறிக்கையை விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய முன்மொழிவுகளை அனுப்ப வேண்டும். இதுதொடர்பாக, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் அரசு மூலம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதனை சிறப்பினமாக கருதி முன்மொழிவுகளை பிப்ரவரி 7-ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE