சேலம்: அஸ்தம்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் விபத்தில் கால் இழந்தவருக்கு ரூ.47 லட்சம் இழப்பீடு தொகையை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினார்.
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் விபத்து வழக்கு, குடும்ப நல வழக்கு, காசோலை, சொத்து பிரச்சினை உள்பட பல்வேறு வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காணப்பட்டது. மக்கள் நீதிமன்றத்தில், கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி சென்னையைச் சேர்ந்த கார்த்திகேயன், சென்னையில் இருந்து காரில் உளுந்தூர்பேட்டை கீரம்பாளையம் மேம்பாலத்தில் சென்றபோது, எதிரே வந்த கார் மோதி விபத்தில் சிக்கினார்.
இந்த விபத்தில் கார்த்திகேயனுக்கு வலது கால் அகற்றப்பட்டது. இந்த வழக்கு மக்கள் நீதி மன்றத்தின் மூலம் சமரசம் செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினருக்கு காப்பீடு நிறுவனம் இழப்பீடு தொகையாக ரூ.47 லட்சம் வழங்கியது. அதற்கான காசோலையை மாவட்ட முன்மை நீதிபதி சுமதி கார்த்திகேயனிடம் வழங்கினார். இதேபோல, பல்வேறு வழக்குகளுக்கு சமரச முறையில் மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்டது. இதில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் மாவட்ட சட்டப் பணி ஆணைக்குழு செயலாளர் தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.