புதுச்சேரி: நெல்லித்தோப்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, பெண் ஒருவருக்கு 6 மாதத்தில் 760 கிராம் எடை கொண்ட பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
அந்தக் குழந்தைக்கு அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் நல்ல முறையில் சிகிச்சை அளித்து, தற்போது 1,700 கிராம் எடை அளவுக்கு உடல் நிலை தேறியிருக்கிறது. அந்தக் குழந்தை ஆரோக்கியத்துடன் உள்ளது. சர்வதேச மகளிர் தினமான நேற்று அந்தக் குழந்தையின் நல் வளர்ச்சியை அங்கீகரிக்கும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள் கேக் வெட்டி கொண்டாடி, குழந்தையை தாயிடம் அளித்து, தாயும் சேயும் நலமுடன் இருக்க வாழ்த்தி, வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மருத்துவர் ஒருவர் கூறும்போது, “இதுபோன்று உடல் எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு நிறைய தொந்தரவுகள் வரும். ஆனால், இந்தக் குழந்தை கடந்த இரு மாதங்களில் நல்ல ஆரோக்கிய நிலையை எட்டியுள்ளது. சிக்கல் எதுவுமே இல்லாமல் இந்த குழந்தையை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
கடந்த 60 நாட்களில் 7 நாட்கள் மட்டுமே ஆன்டிபயாடிக் செலுத்தி, ஒரு நாள் கூட வெண்டிலேட்டரில் இல்லாமல் தேற்றி, தற்போது வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். வீட்டுக்கு சென்ற பின்னர் தாயுடன் குழந்தை சகஜ நிலையோடு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
» ராஜேந்திர பாலாஜிக்கு இபிஎஸ் எச்சரிக்கை - ‘தனிப்பட்ட பிரச்சினையை பொதுவெளியில் பேசாதீர்கள்’
» 'தல மாஸ்’ - வேட்டி சட்டையுடன் தோனியின் புகைப்படத்தை பகிர்ந்தது சிஎஸ்கே!
இதுபோன்று மேற்கத்திய நாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வேறு வித நோய்த் தொற்றுகள் ஏற்படும். ஆனால், இங்குள்ள சூழல் அவ்வாறு இல்லை. கடந்த 60 நாட்களில் உரிய முறையில் கண்காணிக்கப்பட்டு உடல் எடையை கூட்டியிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.