கோவைக்குள் 6 மாதங்கள் வரக்கூடாது; 110 ரவுடிகள் வெளியேற்றம் - போலீஸார் அதிரடி

By டி.ஜி.ரகுபதி

கோவை: மாநகரில் சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், குற்றச் செயல்களிலும் ஈடுபடும் ரவுடிகள் மீதான தடுப்பு நடவடிக்கைகளை காவல் துறையினர் தீவிரப் படுத்தியுள்ளனர்.

இது போன்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை கைது செய்தல், குண்டர் சட்டத்தில் அடைத்தல், பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் ரவுடிகளை ஊரை விட்டு குறிப்பிட்ட மாதங்களுக்கு வெளியேற்றுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

கோவை மாநகர காவல் நிலையங்கள் வாரியாக ரவுடிகள் அவர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப வரையறுக்கப்பட்டு, சரித்திர குற்றப் பதிவேடு பராமரிக்கப்படுகிறது. அதன்படி, ‘ஏ பிளஸ்’ பிரிவில் 13 ரவுடிகளும், ‘ஏ’ பிரிவில் 19 ரவுடிகளும், ‘பி’ பிரிவில் 209 ரவுடிகளும், ‘சி’ பிரிவில் 478 ரவுடிகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கொலை வழக்குகள், கும்பலுக்கு தலைவன் உள்ளிட்டோர் ‘ஏ’ பிளஸ் பிரிவிலும், ஒரு கொலை வழக்கு அல்லது 2 கொலை முயற்சி வழக்குகள், ரவுடி கும்பல் தலைவனுக்கு நெருக்கமான ரவுடிகள் ‘ஏ’ பிரிவிலும், இரண்டுக்கும் மேற்பட்ட அடிதடி வழக்குகளில் தொடர்புடையவர்கள் ‘பி’ பிரிவிலும், ஒரு அடிதடி வழக்கு, பொது அமைதிக்கு இடையூறாக செயல்படுபவர்கள் ‘சி’ பிரிவிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். சரித்திர குற்றப் பதிவேட்டில் மொத்தம் 719 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இதுகுறித்து மாநகர காவல்துறை உயரதிகாரிகள் கூறும்போது, ”சரித்திர பதிவேடு குற்றவாளிகளான ரவுடிகளின் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கண்காணிக்கிறோம். அதில், குற்றச் செயல்களில் ஈடுபடுதல், இவர்கள் மீதான அச்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க முன்வரத் தயங்குதல், நீதிமன்றத்தில் சாட்சிகள் அளிக்க தயங்குதல் போன்ற விவகாரங்களில் தொடர்புடைய ரவுடிகளை கண்டறிந்து, சென்னை மாநகர காவல் சட்டம் 1888, பிரிவு 51-ஏ-ன் படி, அவர்களது செயல்பாடு குறித்து விளக்கம் கேட்டு குறிப்பாணை அளிக்கப்படுகிறது.

அவர்கள் நேரடியாக விளக்கத்தை அளிக்கின்றனர். தொடர்ந்து காவலர்கள் மூலம், அவர்களது செயல்பாடுகள் குறித்து ரகசிய விசாரணைகள் செய்யப்படும். அதில், அதனடிப்படையில் சட்டப் பிரிவை பயன்படுத்தி ரவுடிகளை 6 மாதங்களுக்கு கோவை மாநகரை விட்டு வெளியேற்றுகிறோம். அதன்படி, சமீபத்தில் இரு பிரிவுகளாக மொத்தம் 110 ரவுடிகளை கோவையை விட்டு வெளியேற்றியுள்ளோம்” என்றனர்.

மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் கூறும்போது, ”சென்னை மாநகர காவல் சட்டத்தின், 51 -ஏ பிரிவின்படி, கோவையை விட்டு வெளியேற்றப்படும் ரவுடிகளின் செயல்பாடுகளை தொடர்ச்சியாக கண்காணிக்கிறோம். அவர்கள் திரும்ப தடையை மீறி நகருக்குள் நுழைந்தால் கைது செய்து சிறையில் அடைக்கிறோம். ரவுடிகளின் மீதான தொடர் நடவடிக்கை மற்றும் பொது இடத்தில் மக்கள் பார்வை படும்படி ரோந்துப் போலீஸாரின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு, குற்றச் சம்பவங்கள் மாநகரில் குறைந்துள்ளன” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE