கரூர்: தமிழகத்தில் மக்களவை தொகுதி குறைந்தாலும், மற்ற மாநிலங்களில் அதிகமானாலும் தமிழகத்துக்கு பாதிப்பு என கரூர் எம்.பி ஜோதிமணி தெரிவித்தார்.
கரூரில் செய்தியாளர்களிடம் இன்று (மார்ச் 8) எம்.பி. செ.ஜோதிமணி கூறியது: “கரூர் மாவட்டத்தில் மகளிர் திட்டம் வரலாற்று சாதனையாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 100 சதவீதம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 800 சதவீதம் கடன் வழங்கியுள்ளது. மாவட்ட நிர்வாகத்தையும், மகளிர் திட்ட அதிகாரிகளையும் பாராட்ட வேண்டும்.
மோடியின் மத்திய அரசு எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு அமலாக்கத் துறையை அனுப்பவில்லை என்றால்தான் செய்தி. த.வெ.க தலைவர் விஜய் மக்களவை தொகுதி மறுவரையறையை மக்கள் தொகை அடிப்படையில் செய்யக் கூடாது என திமுக மற்றும் கூ ட்டணி கட்சிகளின் உறுதியான நிலைபாட்டை ஆதரித்துள்ளதை வரவேற்கிறேன்.
இந்தியாவில் ஜனநாயகம் என்பது எண்ணிக்கை அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் இந்த எண்ணிக்கை பாதிப்பையும், துரோகத்தையும் பின்னடைவையும் ஏற்படுத்தும் என்றால், அதை கேள்வி கேட்காமல் விட்டு விட முடியாது. இதை பாசிசம், பாயாசம் என இருக்க முடியாது. தென் மாநில மக்களை இந்திய அரசின் முடிவெடுக்கும் அதிகாரத்திலிருந்து முழுக்க, முழுக்க விலக்கி வைக்கும் விஷயமாகும்.
» நீலகிரியில் 163 குழுக்களுக்கு ரூ.19.08 கோடி கடனுதவி!
» “தமிழகத்தில் குழந்தை முதல் பாட்டி வரை பாதுகாப்பு இல்லை!” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு
தமிழக மக்கள் மத்திய அரசுக்கு ரூ.1 வரி செலுத்தினால் அதில் 29 பைசா மட்டுமே நமக்கு திரும்ப தருகின்றனர். இதுவரை தமிழகத்திற்கு 41 சதவீத வரி வருவாயை வழங்கி வந்த மத்திய அரசு தற்போது அதை 40 சதவீதமாக குறைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நடவடிக்கை மேற்கொண்டால் தமிழ்நாட்டிற்கு பெரியளவில் இழப்பு ஏற்படும். இதை தடுக்கவேண்டும் என்றால் மக்களவையில் நமது எண்ணிக்கை மிக அவசியம்.
தமிழகத்தில் எம்பி தொகுதிகள் குறைந்தாலும், மற்ற மாநிலங்களில் தொகுதிகள் அதிகமானாலும் தமிழகத்திற்குதான் பாதிப்பு. மறுவரையறை என்பது இந்திய ஜனநாயகத்தை ஒழிக்கக் கூடிய விஷயமாகும். எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும்” என்று ஜோதிமணி எம்.பி கூறினார்.