“பெண்களுக்கு கல்வி மட்டுமே போதாது...” - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பேச்சு

By அ.முன்னடியான்

புதுச்சேரி: பெண்களுக்கு கல்வி மட்டுமே போதாது. அவர்கள் பொருளாதார ரீதியாகவும் பலம் பெற வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் இன்று நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் விழாவைக் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தனர்.

விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பேசியது: “இன்று பெண்கள் கல்வி அறிவு பெற்று தொழில்நுட்பம், அறிவியல் ஆராய்ச்சி, தொழில்துறை, விளையாட்டு என்று எல்லா துறைகளிலும் உலக அளவில் சாதனை படைத்து வருகிறார்கள். அவர்களுடைய முன்னேற்றத்துக்கு, பாதுகாப்புக்கு சட்டங்களும், திட்டங்களும் கொண்டு வரப்பட்டாலும் சமுதாயத்தில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் இன்னும் முடிந்த பாடில்லை.

பெண்களுக்கு கல்வி மட்டுமே போதாது. அவர்கள் பொருளாதார ரீதியாகவும் பலம் பெற வேண்டும். வேலை வாய்ப்புகளை பெற வேண்டும். தொழில் முனைவோராக வளர வேண்டும்.அதற்கு எல்லா துறைகளிலும் அவர்களுக்கு சம வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். முன்பெல்லாம் போலீஸ், ராணுவம் இவற்றில் பெண்கள் பணியில் சேருவது கூடாது. அவர்கள் உடல் வலிமை, மன வலிமை குறைவானவர்கள். அவர்களால் முடியாது என்று நினைத்தார்கள்.

ஆனால், நம்முடைய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு ஒரு தொலை நோக்குப் பார்வையோடு இந்த எண்ணங்களை எல்லாம் உடைத்து எறிந்து இருக்கிறது. இன்று, பெண்கள் காவல்துறையில் மட்டுமல்ல, சிஐஎஸ்எப், பிஎஸ்எப், சிஆர்பிஎப் போன்ற துணை ராணுவப் படை, ராணுவம், என்டிஏ என்ற தேசிய பாதுகாப்பு அகாடெமி, கடலோரப் காவல்படை, மகளிர் ராணுவ போலீஸ், பெண்கள் ராணுவ காவல் துறை என எல்லாவற்றிலும் பெண்கள் பணியில் சேருவதற்கு அனுமதி அளித்து இருக்கிறது.

போர் விமானங்களில் விமானிகளாக பெண்கள் பணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இது பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. இதுபோன்ற முயற்சிகள் பெண்களின் பொருளாதாரத்தை மட்டும் அல்ல, அவர்களுடைய மன வலிமையை, தன்நம்பிக்கையை, பாதுகாப்பு உணர்வை பலப்படுத்தும். அவர்கள் கண்ணியத்தோடு வாழ வழி வகுக்கும்.                  

பெண்கள் அரசியல் அதிகாரத்தை பெற வேண்டியது மிகவும் முக்கியம். அப்போது அவர்களுடைய சமுதாய பாதுகாப்பை நாம் உறுதி செய்ய முடியும். பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று பாரதியார் சொன்னது போல, நாடாளுமன்றத்தில், மாநில சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்போது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் ஒரு மைல்கல்லாக இருக்கும். என்றார்.

முதல்வர் ரங்கசாமி பேசுகையில், பெண்கள் பொருளாதாரத்தில் உயர வேண்டும். அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். அதற்கான நிதியுதவி அளிக்கப்பட வேண்டும். வங்கி கணக்கு பெற்று சுய தொழில் தொடங்க பெண்கள் முன்வர வேண்டும். அதன்மூலம் நாட்டின் பொருதாரத்தை உயர்த்த வேண்டும் என்பது தான் அரசின் எண்ணம். அதற்கு சம உரிமை என்பது மிக அவசியமானது. பணியின்போது இன்னல்கள் இல்லாமல், அதற்குரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதும் அரசின் எண்ணம். பெண்களுக்கு என்று பிரதமர் தலைமையிலான மத்திய அரசு பல சட்டங்களை இயற்றி இருக்கிறது. அதனை நடைமுறைப்படுத்துவதில் அரசு அக்கறை எடுத்துள்ளது.

புதுச்சேரியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக இருக்கிறது என்பதை அனைவரும் அறிந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியும் அரசு அளித்து வருகிறது. பாலியல் துன்புறுத்தல் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் அரசு அக்கறை எடுத்துக்கொண்டு அதற்குரிய புகார் பெட்டிகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி வருகின்றது.

புதுச்சேரி அரசானது மக்களுக்காக பல நலத்திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. எந்த அரசும் செய்ய முடியாத நலத்திட்டங்களை மத்திய அரசின் உதவியோடு செய்து கொண்டு வருகிறது. குறிப்பாக மகளிருக்கான திட்டங்கள், அவர்களுக்கான நிதியுதவி இவற்றையெல்லாம் சரியான முறையில் நம்முடைய அரசு செய்து வருகிறது.

இதன் மூலம் பெண்கள் சமுதாயத்தில் சம அந்தஸ்து, உரிமை, அதிகாரம் இருக்க வேண்டும். மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்பது தான் அரசின் எண்ணம். அதனடிப்படையில் அவர்களுக்கான அனைத்து திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது. நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக காணமுடிகிறது. மேலும் அவர்கள் சிறப்பான நிலையை அடைய வேண்டும். அதற்கான உதவியை அரசு எப்போதும் செய்து கொடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், வேளாண் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், அரசுச் செயலர் (மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு) ஜெயந்தகுமார் ரே, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், துறை இயக்குநர் முத்துமீனா மற்றும் அதிகாரிகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். "செயல்களைத் துரிதப்படுத்துதல்" என்ற கருப்பொருளில் இவ்விழாவில் பல்வேறு மகளிர் தின சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE