உதகை: நீலகிரி மாவட்டத்தில் 163 குழுக்களுக்கு ரூ.19.08 கோடி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கி கிளைகளின் மூலம் வங்கி கடன் வழங்கப்பட்டது.
உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கிக்கடன் இணைப்புகள் வழங்கும் விழா இன்று நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் உதகை தாவரவியல் பூங்கா சாலையில் அமைந்துள்ள பழங்குடியினர் மையத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கிக்கடன் இணைப்புகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில், சிறப்பு விருந்தினராக அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன் கலந்துக்கொண்டார். மகளிர் தினத்தை முன்னிட்டு அரசு தலைமை கொறடா கேக் வெட்டி, நீலகிரி மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் 85 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 10.4 கோடி, நகர்புற பகுதிகளில் 47 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5.38 கோடி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 31 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3.66 கோடி ஆக மொத்தம் 163 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.19.08 கோடி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கி கிளைகளின் மூலம் வங்கி கடன் இணைப்பினை அரசு தலைமை கொறடா வழங்கினார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் விவசாயம், தேயிலை மற்றும் காபி தோட்டங்களை குத்தகைக்கு எடுத்தல், மண்பாண்டம் தயாரித்தல், நீலகிரி தைலம், தேன் எடுத்தல், தேங்காய் எண்ணெய் தயாரித்தல், தையல் மற்றும் தொழில் போன்ற பல்வேறு வாழ்வாதார தொழில் மேம்பாட்டிற்காக கடனுதவி வழங்கப்பட்டது.
2022-23ம் ஆண்டில் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்டமைக்காக தேர்வு செய்யப்பட்ட முதுமலை (பொது) கிராம வறுமை ஒழிப்பு சங்கம், தேனாடு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, தேவாலா பகுதி அளவிலான கூட்டமைப்பு, ஊரகப்பகுதிகளில் செயல்படும் ஜெயம் மகளிர் சுய உதவிக்குழு, ஜான்சிராணி மகளிர் சுய உதவிக்குழு, காவ்யா மகளிர் சுய உதவிக்குழு மற்றும் நகர்புறப்பகுதிகளில் செயல்படும் மகிளம் பூ மகளிர் சுய உதவிக்குழு, இனிய சங்கம் மகளிர் சுய உதவிக்குழு, பாரதி மகளிர் சுய உதவிக்குழு ஆகிய சுய உதவிக்குழுக்களுக்கு மணிமேகலை விருதுக்கான கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
மேலும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 37 நபர்களுக்கு நுண்நிதி தொழில் கடனாக ரூ.23 லட்சம் மற்றும் இணை மான்ய திட்ட நிதியாக 3 நபர்களுக்கு ரூ.5,32,110 வழங்கப்பட்டது. விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மகளிர் திட்ட அலுவலர் காசி விஸ்வநாதன், உதகை நகராட்சி தலைவர் வாணீ்ஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதே போல. குன்னூர் நகராட்சியில் மகளிர் தின விழாவை முன்னிட்டு 20 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
குன்னூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவி சுசிலா தலைமையில் மகளிர் தின விழா கோலாக்கலமாக கொண்டாடப்பட்டது. திமுக நிர்வாகிகள் மற்றும் பெண்கள் ரோஜா பூங்கொத்து கொடுத்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இன்று மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக 20 கிலோ கேக் வெட்டி மகளிர்க்கு வழங்கி குழு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். பிறகு நகரமன்ற உறுப்பினர்களும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.