உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்: அரசிதழில் வெளியிடப்பட்டது

By KU BUREAU

தமிழகத்தில் பதவிக்காலம் முடிந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலர் நியமனம் மற்றும் கனிம நிலங்களுக்கு நிலவரிவிதிப்பு தொடர்பான இரு சட்ட மசோதக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில், தமிழகத்தில் கனிம வளங்களை கொண்டுள்ள நிலங்களுக்கு நிலவரி விதிப்பது குறித்த சட்டமசோதா கடந்தாண்டு டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவில் பழுப்புக்கரி, சுண்ணாம்புக்கல், சுண்ணாம்புக்களி, மாக்னசைட், காரீயம் உள்ளிட்ட 13 வகை கனிமங்கள் பெரிய வகை கனிமங்களாகவும், கரட்டுக்கல், சரளை அல்லது மண், வண்ண மற்றும் கருப்பு கருங்கல், கூழாங்கற்கள், மணல், படிகக் கல், தீக்களிமண், உருட்டு களிமண், களிமண், ஆற்று மணல், நொறுங்கிய கல், சுண்ணப்பாறை உள்ளிட்ட 17 கனிமங்கள் சிறிய வகை கனிமங்களாகவும் வகைப்படுத்தப்பட்டிருந்தது. இந்த கனிமங்கள் அடங்கிய நிலப்பரப்புக்கு நிலவரி விதிப்பதற்கு வழி வகை செய்யப்பட்டிருந்தது.

இதன்படி, பெரிய கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.7 ஆயிரம் வரையும, சிறு கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.420 வரையும் வரி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த சட்ட மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது.

இதுதவிர, தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்த 28 உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிப்பதற்கான சட்ட மசோதா இந்தாண்டு தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்த இரண்டு மசோதாக்களுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து இதுகுறித்த அறிவிக்கை தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE