மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து; அதிமுக முன்னாள் எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கம்: இபிஎஸ் அறிவிப்பு

By KU BUREAU

பாஜக நடத்திய மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை அதிமுக எதிர்த்து வருகிறது. பேரறிஞர் அண்ணா அறிவித்த இருமொழி கொள்கையே தொடர வேண்டும் என ஆதரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் நேற்று முன்தினம் பெரியபாளையம் அருகே உள்ள மஞ்சங்காரணை கிராமத்தில் வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

அப்போது, அவ்வழியே கும்மிடிப்பூண்டி தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான கே.எஸ்.விஜயகுமார் காரில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த பாஜகவினர் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து, விஜயகுமார் கையெழுத்திட்டுள்ளார். மும்மொழிக் கொள்கையை அதிமுக எதிர்த்து வரும் நிலையில், ஆதரவாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ கையெழுத்திட்டிருப்பது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரை கட்சியிலிருந்து நீக்கி, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை, எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆகிய பதவிகளை வகித்து வந்த கே.எஸ்.விஜயகுமார், கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டுள்ளார். கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டுள்ளார். கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில், கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டுள்ளார். அதனால் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொருட்களில் இருந்தும் அவர் நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து விஜயகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ’மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் வற்புறுத்தி கேட்டதாலயே கையெழுத்திட்டேன். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி சந்தித்து என் தரப்பு விளக்கத்தை அளிப்பேன்’ என தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE