அரசு உதவிபெறும் சிறுபான்மை கல்வியியல் கல்லூரியில் தூய்மைப் பணியாளர் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து மேல்முறையீடு செய்த தமிழக அரசுக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வேப்பேரியில் உள்ள அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரியில் தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்டவரின் பணி நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கக்கோரி கல்லூரி நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, அந்த தூய்மைப் பணியாளரின் பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசுத்தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்குமுறை விதிகளின்படி, அரசு உதவிபெறும் கல்லூரிகள் மேற்கொள்ளும் நியமனங்களுக்கு அரசு உதவி வழங்க வேண்டும். ஆனால், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட குரூப் டி பணியிடங்களுக்கு, சுயநிதி கல்லூரிகள் நிரந்தரப் பணியாளர்களை நியமிப்பதை தடுக்கும் வகையில், ஒப்பந்த தொழிலாளர்களை நியமித்துக் கொள்ளும்படி கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்துள்ளது.
அதன்படி இந்தக் கல்லூரியில் நியமிக்கப்பட்ட தூய்மைப் பணியாளரின் நியமனத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து இருக்க வேண்டும். ஆனால் அதைவிடுத்து தமிழக அரசு தேவையின்றி இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. எனவே இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். ஏற்கெனவே தீர்வு காணப்பட்ட ஒரு விவகாரத்தில் மீண்டும் தமிழக அரசு மேல் முறையீடு செய்து நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக தமிழக அரசுக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.
» சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு
» இலங்கை கடற்படையினரால் 14 மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இதில் ரூ. 2.50 லட்சத்தை சம்பந்தப்பட்ட தூய்மைப் பணியாளருக்கும், மீதமுள்ள தொகை ரூ. 2.50 லட்சத்தை உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கும் 15 நாட்களில் வழங்க வேண்டும். இந்த வழக்கில் தனி நீதிபதி ஏற்கெனவே பிறப்பித்துள்ள உத்தரவை தமிழக அரசு 4 வாரங்களில் அமல்படுத்த வேண்டும். ரூ. 5 லட்சம் செலுத்தியது தொடர்பாக மார்ச் 20 அன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்