பாஜக கூட்டணிக்காக இப்போது தவமிருக்கிறது அதிமுக: அண்ணாமலை விளாசல்

By KU BUREAU

கோவை: பாஜக தீண்ட தகாத கட்சி, நோட்டா கட்சி, பாஜகவால்தான் தோற்றோம் என்றார்கள். இன்றைக்கு பாஜக வேண்டும் என்று தவம் இருக்கக் கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘ அதிமுகவினர் அப்போது பாஜக தீண்ட தகாத கட்சி, நோட்டா கட்சி, பாஜகவால்தான் தோற்றோம் என்றார்கள். இன்றைக்கு பாஜக வேண்டும் என்று தவம் இருக்கக் கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம். பாஜக இல்லாமல் தமிழ்நாடு அரசியல் இல்லை. நான் எந்த கட்சியையும் சிறுமைப்படுத்தவில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் தலைமை, யார் முதலமைச்சர் என்பதை பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம். பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று சொன்னவர்கள் இன்று பா.ஜ.க இல்லாமல் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அதே நேரத்தில் நம்மை நம்பி பலர் இந்த கூட்டணியில் பயணிக்கின்றனர். அவர்களை உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகின்றோம்.

இக்கட்டான சூழலில் வந்த டிடிவி தினகரன் போன்றோரை இப்போது எப்படி கழற்றிவிட முடியும்?. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தினகரனுக்கு பாஜக நன்றியுடன் இருக்கும்” என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE